குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்


குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்
x
தினத்தந்தி 1 Nov 2022 12:15 AM IST (Updated: 1 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தலையாட்டிமந்து பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என ஊட்டி நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நீலகிரி

ஊட்டி,

தலையாட்டிமந்து பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என ஊட்டி நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நகராட்சி கூட்டம்

ஊட்டி நகராட்சி மன்ற கூட்டம் நேற்று கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு நகராட்சி தலைவர் வாணீஸ்வரி தலைமை தாங்கினார். துணை தலைவர் ரவிக்குமார், ஆணையாளர் காந்திராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலந்துகொண்ட கவுன்சிலர்கள் பேசியதாவது:-

ஜார்ஜ்(தி.மு.க.):- ஊட்டி லோயர் பஜார் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறி உள்ளது. இதற்கு உரிய தீர்வு காண வேண்டும்.

ஆணையாளர் காந்திராஜன்:- நடைபாதையில் வாகனங்கள் நிறுத்தாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

முஸ்தபா(தி.மு.க.):- ஊட்டி நகரில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளது. இதுகுறித்து முறையிட்டும் இதுவரை தீர்வு காணவில்லை. நகரின் முக்கிய இடங்களில் சுற்றுலா தலங்கள் குறித்து சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும்.

ஆணையாளர்:- தெருநாய்கள் தொல்லைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆக்கிரமிப்பு கடைகள்

தம்பி இஸ்மாயில் (தி.மு.க.):- பருவமழை தொடங்கியுள்ள நிலையில் காந்தல் பகுதியில் கால்வாய்கள் இன்னும் முழுமையாக தூர்வாரப்பட வில்லை. இதனால் கழிவுநீருடன் சேர்ந்து மழைநீர் குடியிருப்புகளுக்குள் புகும் அபாயம் உள்ளது. எனவே, கால்வாயில் குவிந்துள்ள மண்ணை அகற்றி தூர்வார வேண்டும். காட்டுப்பன்றி தொல்லை உள்ளது.

ஆணையாளர்:- கால்வாய்கள் தூர்வாரும் பணி முறையாக மேற்கொள்ளப்படும். வனத்துறை மூலம் காட்டுப்பன்றி பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.

ரவி (தி.மு.க.):- மத்திய பஸ் நிலையம் அருகே படகு இல்ல சாலையோரத்தில் நகராட்சி இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, 3 கடைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

நகராட்சி அதிகாரிகள்:- பஸ் நிலையம் அருகே ஆக்கிரமிப்பு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. அவர்கள் நீதிமன்ற உத்தரவு பெற்று திறந்து உள்ளனர்.

துணை தலைவர் ரவிக்குமார்:- கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகள் தவிர்த்து பிற வார்டுகளில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டங்களில் தலையிட கூடாது. ஆரம்பத்தில் ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தால் அதன் மூலம் நகராட்சிக்கு வருவாய் கிடைத்து வந்தது. ஒரு வார்டில் படப்பிடிப்பு நடந்தது குறித்து தெரியாததால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் படப்பிடிப்பு நடைபெற்றால், நகராட்சிக்கு வருவாய் கிடைக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடிநீர் பிரச்சினை

கஜேந்திரன் (தி.மு.க.):- குன்னூர் சாலையில் ஆவின் முதல் சவுத்வீக் வரை பல இடங்களில் உள்ள கடைகள் நகராட்சி அனுமதி பெற்று இயங்குகிறதா என்பதை உறுதிபடுத்த வேண்டும். தலையாட்டிமந்து பகுதிகளில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

நகராட்சி அதிகாரிகள்:- குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.

மேலும் கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் நிலவும் பிரச்சினைகள் குறித்து தெரிவித்தனர்.



Next Story