தனியார் நிறுவனம் ரூ.12 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும்-நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
வக்கீலுக்கு தனியார் நிறுவனம் ரூ.12 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.
நெல்லை பொன்விழா நகரைச் சேர்ந்த வக்கீல் ஜான் பிரைட், நெல்லையில் உள்ள தனியார் ஹோம் சர்வீஸ் நிறுவனத்திடம் சேவை கட்டணம் செலுத்தி, தனது வீட்டு வேலைக்கு ஆட்களை அமர்த்தியுள்ளார். அந்த நிறுவனத்தினர் அனுப்பிய ஆட்கள் சில நாட்கள் பணிபுரிந்து விட்டு நின்று விட்டனர். தொடர்ந்து அந்த ஹோம் சர்வீஸ் நிறுவனத்திடம் ஜான் பிரைட் தனது வீட்டு வேலைக்கு ஆள் அனுப்புமாறு கேட்டுள்ளார். ஆனால் அந்த நிறுவனம் எந்தவிதமான பதிலும் சொல்லாமல் அலைக்கழித்தது. இதனால் ஜான் பிரைட் செலுத்திய சேவை கட்டணத்தை திருப்பி தருமாறு கேட்டார். ஆனால் அந்த நிறுவனத்தினர் சேவை கட்டணத்தை திருப்பித்தர மறுத்து விட்டனர்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஜான் பிரைட், வக்கீல் பிரம்மா மூலம் நெல்லை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கினை நீதிபதி கிளாடஸ்டோன் பிளஸ்ட் தாகூர், உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர் விசாரணை நடத்தி, அந்த ஹோம் சர்வீஸ் நிறுவனம் செய்த சேவை குறைபாட்டால் ஜான் பிரைட்டுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.10 ஆயிரமும், வழக்கு செலவுக்கு ரூ.2 ஆயிரமும் என மொத்தம் ரூ.12 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்குமாறு தீர்ப்பு அளித்தனர்.