தந்தை இறுதிச்சடங்கில் பங்கேற்க கைதிக்கு அனுமதி


தந்தை இறுதிச்சடங்கில் பங்கேற்க கைதிக்கு அனுமதி
x

தந்தை இறுதிச்சடங்கில் பங்கேற்க கைதிக்கு அனுமதி வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

மதுரை

மதுரை,‌

மதுரையைச் சேர்ந்தவர் முனீஸ் என்ற முனீஸ்வரன். மதுரை மாவட்டம் திருமங்கலம், பெருங்குடி போலீஸ்நிலையங்களில் பதிவான வழக்குகளில் இவர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் (4-ந்தேதி) இவரது தந்தை தங்கராஜ் இறந்துவிட்டார். இதையடுத்து அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்க அனுமதி கேட்டு முனீஸ்வரன் மதுரை ஐகோர்ட்டில் அவசர மனு தாக்கல் செய்தார்.

இந்த அவசர மனுவை நீதிபதி தாரணி நேற்று விசாரித்தார்.

அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் வெங்கடேஷ் ஆஜராகி, மனுதாரர் மீது பொய் வழக்கு போடப்பட்டு கைதாகியுள்ளார். அவரது தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று வாதாடினார். ஆனால் அரசு தரப்பு வக்கீல் அன்புநிதி ஆஜராகி, மனுதாரர் மீது மொத்தம் 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 6 கொலை வழக்குகளும் அடங்கும். மனுதாரருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கும்பட்சத்தில் அவர் தலைமறைவாகலாம். சாட்சிகளை கலைக்கலாம். எனவே ஜாமீன் வழங்கக்கூடாது என ஆட்சேபம் தெரிவித்தார்.

விசாரணை முடிவில், மனுதாரர் தனது தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க 24 மணி நேரம் மட்டும் இடைக்கால ஜாமீனில் விடுவிக்க அனுமதிக்கப்படுகிறது. ஜாமீனின்போது அவருக்கு பலத்த பாதுகாப்புடன் வெளியில் விட வேண்டும். அவரது தந்தை இறுதிச்சடங்கில் பங்கேற்ற பின் உடனடியாக மீண்டும் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story