நாமக்கல் தினசரி சந்தையில்வரத்து அதிகரிப்பால் பூக்கள் விலை குறைந்தது
பூக்கள் விலை விவரம்
நாமக்கல் மாவட்டம் மோகனூர், சேந்தமங்கலம், எருமப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் பூக்கள் பயிர் செய்யப்பட்டு வருகிறது. இந்த பூக்கள் நாமக்கல் பஸ்நிலையத்தில் உள்ள தினசரி பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. அந்த வகையில் சுமார் 2 டன் வரை பூக்கள் விற்பனைக்கு வரும். இவற்றை வியாபாரிகள் வாங்கி சென்று நகர் முழுவதும் விற்பனை செய்கின்றனர்.
நாமக்கல் தினசரி மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து நேற்று அதிகமாக இருந்தது. இதற்கிடையே சுபமுகூர்த்த நாட்கள் முடிந்து விட்டதால், பூக்கள் விலை சற்று குறைந்து காணப்பட்டது.
கடந்த வாரம் கிலோ ரூ.360-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை பூ நேற்று கிலோ ரூ.240-க்கும், கடந்த வாரம் கிலோ ரூ.320-க்கு விற்பனை செய்யப்பட்ட முல்லை பூக்கள், நேற்று கிலோ ரூ.220-க்கும் விற்பனை செய்யப்பட்டன.
விவசாயிகள் கவலை
இதேபோல் கடந்த வாரம் கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்ட சம்பங்கி பூக்கள் நேற்று கிலோ ரூ.30-க்கும், கடந்த வாரம் கிலோ ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்ட அரளி பூ நேற்று அதே விலைக்கு விற்பனையானது.
கடந்த ஒரு வாரமாக சுபமுகூர்த்தம் அதிக அளவில் இருந்ததால், பூக்களின் விலை உச்சத்தில் இருந்தது. தற்போது விசேஷ நாட்கள் எதுவும் இல்லாததால் பூக்கள் விலை குறைந்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பூக்கள் விலை குறைந்து இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.