ரவுடியை போலீஸ் சுட்டு பிடித்தது


ரவுடியை போலீஸ் சுட்டு பிடித்தது
x
தினத்தந்தி 8 March 2023 12:15 AM IST (Updated: 8 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ரவுடியை போலீஸ் சுட்டு பிடித்தது

கோயம்புத்தூர்

கோவை

கோவை அருகே துப்பாக்கி சூடு நடத்தி தப்ப முயன்ற ரவுடியை போலீஸ் சுட்டு பிடித்தது. காலில் காயமடைந்த அவருக்கு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை அருகே நடந்த இந்த பரபரப்பு சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

பிரபல ரவுடி

மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்தவர் சத்தியபாண்டி (வயது 31). இவர் கோவை விளாங்குறிச்சி பகுதியில் தனது மனைவியுடன் வசித்து வந்தார். பிரபல ரவுடியான இவர் மீது கோவை, மதுரை ஆகிய பகுதிகளில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவர் கோவை மாநகர பகுதியில் பல்வேறு கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கோவை சிவானந்தபுரத்தை சேர்ந்த ரவுடியான சஞ்சய் ராஜா (36) என்பவருக்கும், சத்தியபாண்டி என்பவருக்கும் இடையே போட்டி ஏற்பட்டது.

சுட்டுக்கொலை

அதில் சத்தியபாண்டி, சஞ்சய் ராஜாவை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி ஆவாரம்பாளையம் சாலையில் நின்றிருந்த சத்தியபாண்டியை, சஞ்சய் ராஜா உள்பட 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்தனர்.

பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் தப்பிச்சென்றனர். இது தொடர்பாக கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அத்துடன் இந்த கும்பலை சேர்ந்தவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.

முக்கிய நபர் சரண்

இதற்கிடையே இந்த கும்பலை சேர்ந்த சஞ்செய் குமார், காஜா உசேன், ஆல்வின், சபூல்கான் ஆகியோர் அரக்கோணம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். பின்னர் அவர்களை போலீசார் கோவை அழைத்து வந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு அவர்களை கடந்த 24-ந் தேதி முதல் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்கள்.

அதில் தலைமறைவான சஞ்சய் ராஜா குறித்து சில முக்கிய தகவல்கள் கிடைத்தன. அவரிடம் 2 துப்பாக்கிகள் இருப்பதாகவும், அவர்தான் சத்தியபாண்டியை துப்பாக்கியால் சுட்டதாகவும் தெரிய வந்தது. இந்த கொலையில் முக்கிய நபராக கருதப்பட்ட சஞ்சய் ராஜா கடந்த 21-ந் தேதி சென்னை எழும்பூர் கோர்ட்டில் சரண் அடைந்தார். பின்னர் அவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

கோர்ட்டில் மனு தாக்கல்

இதையடுத்து அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்தனர். இதை தொடர்ந்து கோர்ட்டில் அனுமதி பெற்று கோவை போலீசார் கடலூர் சென்றனர். அங்குள்ள சிறையில் இருந்த சஞ்சய் ராஜாவை பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்சென்று எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு கடந்த 1-ந் தேதி கோவை அழைத்து வந்தனர்.

பின்னர் போலீசார், அவரை கோவையில் உள்ள 3-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அத்துடன் அன்றே, அவரை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு அதே கோர்ட்டில் போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

காவலில் விசாரிக்க அனுமதி

இந்த மனு 3-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கடந்த 2-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது கோவை சிறையில் அடைக்கப்பட்ட சஞ்சய் ராஜாவை பலத்த பாதுகாப்புடன் போலீசார் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். அந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, சஞ்சய் ராஜாவை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்தார்.

இதை தொடர்ந்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், கோவை வடக்கு துணை கமிஷனர் சந்தீஷ் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணலீலா, சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்திரமூர்த்தி, சந்திரசேகர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், முதல்நிலை காவலா ஸ்ரீதர் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் சஞ்சய் ராஜாவை ரகசிய இடத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள்.

மலைக்கு அழைத்துச்சென்றனர்

தொடர்ந்து நேற்று முன்தினம் சிவானந்தாபுரத்தில் உள்ள அவருடைய வீட்டுக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தப்பட்டது. அதில் இந்த கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியை எங்கே மறைத்து வைத்து உள்ளீர்கள் என்று போலீசார் கேட்டனர். அதற்கு அவர், கோவை சத்தி சாலையில் உள்ள சரவணம்பட்டியை அடுத்த கரட்டுமேடு பகுதியில் உள்ள சிறிய மலையில் மறைத்து வைத்து இருப்பதாக கூறினார்.

இதையடுத்து சஞ்சய் ராஜாவை இன்ஸ்பெக்டர் கிருஷ்ணலீலா தலைமையிலான தனிப்படை போலீசார் சஞ்சய் ராஜாவை, அவர் கூறிய இடத்துக்கு நேற்று காலை 6.30 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்சென்றனர். சிறிது தூரம் நடந்து சென்று கொண்டிருந்த சஞ்சய் ராஜா திடீரென்று ஒரு இடத்தில் நின்று விட்டார்.

போலீஸ் மீது துப்பாக்கிச்சூடு

உடனே போலீசார், அவரிடம் ஏன் இங்கு நிற்கிறாய் என்று கேட்டு உள்ளனர். அதற்கு அவர் ஒரு மரத்தின் அருகே உள்ள பகுதியை காட்டி, அங்கு இருக்கும் சிறிய கல்லுக்கு கீழ்தான் துப்பாக்கியை மறைத்து வைத்து உள்ளதாக கூறி உள்ளார். உடனே அந்த பகுதிக்கு போலீசார் அவரை அழைத்துச்சென்றனர்.

அப்போது அந்த கல்லை புரட்டிப்போட்டுவிட்டு அங்கு மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்த சஞ்சய் ராஜா, திடீரென்று அங்கு நின்று கொண்டு இருந்த இன்ஸ்பெக்டர் கிருஷ்ணலீலாவை நோக்கி சுட்டார். ஆனால் அவர் மீது அந்த குண்டு படவில்லை. இதனால் மீண்டும் அவர் மீது சுட்டார். ஆனால் அவர் விலகியதால் அந்த குண்டு அங்கு இருந்த மரத்தில் லேசாக உரசியபடி சென்றது.

காலில் துப்பாக்கியால் சுட்டார்

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சஞ்சய் ராஜா அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். உடனே அங்கு நின்றிருந்த சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், பாதுகாப்பு கருதி தன்னிடம் இருந்த கைதுப்பாக்கியை எடுத்து சஞ்சய் ராஜாவின் இடதுகால் முழங்காலுக்கு கீழ்ப்பகுதியில் சுட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர், தன்னிடம் இருந்த துப்பாக்கியை கீழே போட்டார்.

உடனே போலீசார் சஞ்சய் ராஜாவை மடக்கி பிடித்தனர். மேலும் கீழே கிடந்த துப்பாக்கியையும், போலீசார் கைப்பற்றினார்கள். துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த சஞ்சய் ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அத்துடன் அவர் சிகிச்சை பெற்று வரும் பகுதியில் போலீசாரும் குவிக்கப்பட்டு உள்ளனர்.

துணை கமிஷனர் ஆய்வு

இதற்கிடையே துப்பாக்கிச்சூடு நடந்த இடத்துக்கு கோவை மாநகர வடக்கு துணை கமிஷனர் சந்தீஷ் நேரில் சென்று ஆய்வு செய்தார். துப்பாக்கியை ஒழித்து வைத்திருந்த பகுதி, மரத்தில் குண்டு உரசியபடி சென்ற பகுதி உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தருவதாக சஞ்சய் ராஜா கூறியதால் அவரை சம்பவ இடத்துக்கு அழைத்துச்சென்றனர். ஆனால் அவர் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடுவதற்காக 2 ரவுண்டு துப்பாக்கியால் சுட்டார். நல்லவேளையாக யார் மீதும்படவில்லை. இருப்பினும் பாதுகாப்பு கருதி அவர் காலில் சுட்டு அவரை பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்றார்.

2-வது துப்பாக்கிச்சூடு

கோவையில் கோர்ட்டு அருகே கோகுல் என்பவரை வெட்டி கொலை செய்த வழக்கில் தொடர்புடைய 7 பேர் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே போலீசில் சிக்கினார்கள். அவர்களை போலீசார் கோவை அழைத்துவந்தபோது போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற கவுதம், ஜோஸ்வா ஆகியோரை கடந்த மாதம் 14-ந் தேதி போலீசார் துப்பாக்கியால் காலில் சுட்டு பிடித்தனர்.

அதன் பின்னர் நேற்று போலீசாரை சுட்டுவிட்டு தப்பி ஓட முயன்ற சஞ்சய் ராஜாவை போலீசார் சுட்டு பிடித்து இருக்கிறார்கள். ஒரே ஆண்டில் ஒரு மாதத்துக்குள் தப்பி ஓட முயன்ற ரவுடிகள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்து இருப்பதால் ரவுடியாக வலம் வரும் நபர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story