நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது


நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 4 Sept 2023 12:15 AM IST (Updated: 4 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆவணி மாத 3-வது ஞாயிற்றுக்கிழமையையொட்டி நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

ஆவணி மாத 3-வது ஞாயிற்றுக்கிழமையையொட்டி நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

நாகராஜா கோவில்

ஆடி மாதத்தில் அம்மன் வழிபாடு என்பது போல குமரி மாவட்டத்தில் ஆவணி மாதத்தில் நாகராஜர் வழிபாடு சிறந்ததாக கருதப்படுகிறது. இதனால் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதிலும் ஞாயிற்றுக்கிழமை என்றால் கோவிலில் ஆண்களும், பெண்களும் குவிவார்கள். அன்றைய தினம் நாகராஜரை வழிபட்டால் நினைத்த காரியங்கள் கைகூடும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.

இந்தநிலையில் ஆவணி மாத 3-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சாமிக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் நேரம் செல்ல செல்ல கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

நாகர் சிலைகள்

பக்தர்கள் கோவில் வளாகத்தில் உள்ள ஆலமரத்தை சுற்றி வீற்றிருக்கும் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபட்டனர். பின்னர் அங்குள்ள விநாயகரையும், மூலவரான நாகராஜரை வணங்கினர். நாகராஜரை தாிசனம் செய்ததும் பக்தர்களுக்கு பிரசாதமாக மண் வழங்கப்பட்டது.

தொடர்ந்து சிவன், கிருஷ்ணர், துர்க்கை அம்மன், முருகன், ஆஞ்சநேயர் ஆகியோரை பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆவணி ஞாயிற்றுக்கிழமையையொட்டி நாகராஜா கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு அன்னதானம் சாப்பிட்டனர்.

போலீஸ் பாதுகாப்பு

கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கண்காணிப்பு கேமராக்கள் மூலமாகவும் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.


Next Story