சேறும், சகதியுமான சாலையை சீரமைக்க வேண்டும்


சேறும், சகதியுமான சாலையை சீரமைக்க வேண்டும்
x

அய்யன்கொல்லி-பந்தலூர் இடையே சேறும், சகதியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நீலகிரி

பந்தலூர்,

அய்யன்கொல்லி-பந்தலூர் இடையே சேறும், சகதியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

அரசு பஸ்கள்

பந்தலூர் அருகே அய்யன்கொல்லியில் இருந்து மழவன் சேரம்பாடி, குறிஞ்சிநகர், கொளப்பள்ளி, ஏலமன்னா வழியாக பந்தலூருக்கு நெடுஞ்சாலை செல்கிறது. தமிழக-கேரள மாநில எல்லையில் அய்யன்கொல்லி உள்ளதால், கூடலூரில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அய்யன்கொல்லி எருமாடு, தாளூர் வழியாக கோவைக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது.

அய்யன்கொல்லி-பந்தலூர் இடையே வாகனங்கள், ஜீப்புகள், ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தநிலையில் அய்யன்கொல்லி முதல் எலியாஸ் கடை வரை சாலை பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. தற்போது பெய்து வரும் மழையால், அந்த குழிகளில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. மேலும் சாலை சேறும், சகதியுமாக மாறி உள்ளது.

பொதுமக்கள் அவதி

இதனால் வாகனங்கள் பழுதடைந்து சாலையின் நடுவே நின்று விடுகின்றன. இதன் காரணமாக காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியில் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனங்களை இயக்கி வருகின்றனர். ஆம்புலன்சுகள் பழுதடைந்து நடுவழியில் நிற்பதால், நோயாளிகள், கர்ப்பிணிகள் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

அய்யன்கொல்லியில் இருந்து கூலி வேலை, பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பிற தேவைகளுக்காக பொதுமக்கள் தினமும் சென்று வருகின்றனர். பல்வேறு இடங்களில் சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. குறிப்பாக மழவன் சேரம்பாடியில் சாலை மோசமாக உள்ளது. மோட்டார் சைக்கிளில் வருபவர்கள் திடீரென வழுக்கி விழுந்து, காயத்தடன் உயிர் தப்பி செல்கின்றனர். எனவே, அய்யன்கொல்லி முதல் எலியாஸ் வரை சேறும், சகதியுமான சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story