நில ஒருங்கிணைப்பு சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும்
நில ஒருங்கிணைப்பு சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும்
நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
காவிரி விவசாயிகள் சங்கம்
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று குறைதீர்க்கும் கூட்டம் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.
இதில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க மாநில தலைவர் பழனியப்பன் தலைமையில் தெற்கு மாவட்ட செயலாளர் மணி, தலைவர் வீரப்பன், வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார், செயலாளர் பாட்ஷாரவிச்சந்திரன், இணை செயலாளர் அறிவு ஆகியோர் முன்னிலையில் விவசாயிகள் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
திரும்ப பெற வேண்டும்
தமிழக அரசு கடந்த மாதம் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடர் நிறைவு நாளில் கொண்டுவரப்பட்ட நில ஒருங்கிணைப்பு சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இந்த சட்டம் நிறைவேற்றப்படுவதன் மூலம் விவசாயிகள் உரிமைகள் பறிபோவதோடு, உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிர்வாக அதிகாரமும் அபகரிக்கப்படுகிறது. இது ஒட்டுமொத்த தமிழக விசாயிகளையும், காந்தி கண்ட கிராம ராஜியத்தையும் குழிதோண்டி புதைப்பதற்கு சமமாக உள்ளது.
மேலும் காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற சட்டத்தையும் முறியடிக்கும் வலிமை பெற்றது. இந்த சட்டத்தை எந்தவித முன்அறிவிப்பும் இன்றி அவசரம், அவசரமாக நிறைவேற்றப்பட்டதால் சட்டமன்ற ஜனநாயகமே கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது. இது வருத்தம் அளிக்கிறது. அரசின் நடவடிக்கைகளுக்கு முற்றிலும் எதிரான வகையில் உள்ளது என்பதை முதல்-அமைச்சர் உணர்ந்து இதனை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.