ஆக்கிரமிப்பு அகற்றுவதில் நெடுஞ்சாலைத்துறையினர் பாரபட்சம்


ஆக்கிரமிப்பு அகற்றுவதில் நெடுஞ்சாலைத்துறையினர் பாரபட்சம்
x

மணப்பாறையில் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் நெடுஞ்சாலைத்துறை யினர் பாரபட்சம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

திருச்சி

மணப்பாறையில் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் நெடுஞ்சாலைத்துறை யினர் பாரபட்சம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

ஆக்கிரமிப்பு அகற்றம்

மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள அறிவிப்பு செய்யப்பட்டது. மேலும் 29-ந் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளாவிட்டால் நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதில் பெரும்பாலானோர் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொண்டனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் தொடங்கியது. முதல் கட்டமாக மதுரை ரோட்டில் பஸ் நிலையம் அருகே இருந்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது. இதில் கடைகள் மற்றும் மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள் முன் நெடுஞ்சாலை துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

பாரபட்சம்

லட்சுமண நாராயணன் நகர் அருகே வரை நெடுஞ்சாலை துறை அளவீடு செய்துள்ளதின் அடிப்படையில் ஆக்கிரமிப்புகள் தடாலடியாக அகற்றப்பட்டன. ஏற்கனவே அவகாசம் வழங்கி முடித்து விட்ட நிலையில் நேற்றும் பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

மதுரை சாலையில் ஒரு பகுதியில் வடுகபட்டி வரை நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆக்கிரமிப்பு பகுதிகள் அளவீடு செய்யப்பட்டு அத்துக்கல் ஊன்றப்பட்டுள்ளன. ஆனால் அந்த பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் சரிவர அகற்றப்படாமல் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. அளவீடு செய்யப்பட்டுள்ள பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளன.

இதே போல் சில இடங்களில் நெடுஞ்சாலைத்துறை அத்துக்கல் இருந்தும் அந்த இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வில்லை. இதை நெடுஞ்சாலைத்துறையினர் கண்டும், காணாமல் சென்றுவிட்டதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

நடை பாதை

மணப்பாறை நகரில் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் இல்லாத சாலையில் கடைகளை இடித்து தள்ளி உள்ளனர். ஆனால் அளவீடு செய்யப்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் இருந்தும், அதனை அகற்றாமல் சென்றது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த கோவில்பட்டி சாலை, திருச்சி சாலை, விராலிமலை சாலை, கடைவீதி மற்றும் திண்டுக்கல் சாலை ஆகியவற்றில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளை அகலப்படுத்திட வேண்டும், ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றிய பின்னர் இனி மீண்டும் ஆக்கிரமிப்பு நடைபெறாதவாறு உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதான சாலைகளில் பாதசாரிகள் நடந்து செல்வதற்கான பாதையை ஏற்படுத்தி தர வேண்டும். கண்துடைப்புபோல ஆக்கிரமிபுகளை அகற்ற கூடாது, ஆக்கிரமிப்புக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

முழுமையாக அகற்றப்படும்

இது குறித்து மணப்பாறையை சேர்ந்த நெடுஞ்சாலை துறை அதிகாரி சுப்பையா கூறும்போது, மணப்பாறை பகுதிகளில் சாலையின் இரு புறமும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான அளவீடு செய்யப்பட்டுள்ள இடங்களில் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படும். இதே போல் விடுபட்டுள்ள இடங்களில் அளவீடு செய்து அதற்கான அத்துக் கல் நடப்படும். ஆக்கிரமிப்புகள் முறையாக, முழுமையாக அகற்றப்படும். ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதில் எந்த பாரபட்சமும் இருக்காது என்றார்.


Next Story