திராவிட மாடல் ஆட்சி இந்தியாவுக்கே வழிகாட்டியாக உள்ளது


திராவிட மாடல் ஆட்சி இந்தியாவுக்கே வழிகாட்டியாக உள்ளது
x

தமிழகத்தின் திராவிட மாடல் ஆட்சி இந்தியாவுக்கே வழிகாட்டியாக உள்ளது என்று ஜோலார்பேட்டை அருகே நடந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

ராணிப்பேட்டை

நலத்திட்ட உதவி வழங்கும் விழா

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே மண்டலவாடியில் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், முடிவுற்ற திட்டப்பணிகள் தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வரவேற்று பேசினார். சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளர் டாக்டர் டேரேஸ் அஹமத், எம்.பி.க்கள் சி.என்.அண்ணாதுரை, டி.எம்.கதிர்ஆனந்த், எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.74 கோடி மதிப்பில் 14,253 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

ஒவ்வொரு குடும்பத்துக்கும் அரசு திட்டம்

தி.மு.க. தலைமையிலான அரசு பதவியேற்று 26 மாதங்கள் ஆகிறது. இதில் 260-க்கும் அதிகமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இங்கு ரூ.74 கோடியில் 14,253 பேருக்கு பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் அரசின் லட்சியம். அதற்கு முன்மாதிரியாகத்தான் இங்கு அனைத்து தரப்பினரும் வந்துள்ளதை பார்க்கும் போது தெரிகிறது.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் அரசின் திட்டம் செல்ல வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டு அரசு செயல்படுகிறது. அரசு பஸ்சில் மகளிர் கட்டணமின்றி செல்லும் திட்டத்தில் 310 கோடி பெண்கள் பயன் அடைந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் இத்திட்டத்தில் 2.65 கோடி மகளிர் பயன் அடைந்துள்ளனர்.

இலவச மின் இணைப்பு

புதுமைப்பெண் திட்டத்தில் தமிழகத்தில் 2 லட்சம் மாணவிகள் பயன் அடைந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் 1,800 மாணவிகளுக்கு இத்திட்டத்தின் மூலம் மாதம் தோறும் ரூ.1,000 அவர்களது வங்கி கணக்கில் செல்கிறது. காலை சிற்றுண்டி திட்டத்தில் தமிழகத்தில் 17 லட்சம் மாணவர்கள் பயன் அடைந்து வருகின்றனர். மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் மருத்துவ செலவு பாதியாக குறைந்துள்ளது. இத்திட்டத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 175 பேர் பயன் அடைந்துள்ளனர்.

இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 என்ற திட்டத்தில் 1100 பேர் பயன் அடைந்துள்ளனர். இல்லம் தேடி கல்வி திட்டத்தில் 63,400 பேர் பயன் அடைந்துள்ளனர். இதேபோல் திருப்பத்தூர் மாவட்டத்தில் 2,508 விவசாயிகளுக்கு இலவச இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் ரூ.56 கோடியிலும், ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.24 கோடியிலும், வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.23.65 கோடியிலும் புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தியாவுக்கே வழிகாட்டியாக

அனைவரும் எதிர்பார்க்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். வாணியம்பாடி தொகுதியில் ரூ.3 கோடியில் சிறுவிளையாட்டு அரங்கம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடக்கிறது. மாவட்ட விளையாட்டு அரங்கம் ரூ.15 கோடியில் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாட்டறம்பள்ளி அருகே தொழிற்பேட்டை அமைக்க தமிழக முதல்-அமைச்சரிடம் பரிந்துரைக்கப்படும்.

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களை பார்த்து மற்ற மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் தமிழகத்தின் திராவிட மாடல் ஆட்சி இந்தியாவுக்கே வழிகாட்டியாக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் எ.வ.வேலு

முன்னதாக அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-

திருவள்ளுவர் இன்று உயிருடன் இருந்து இருந்தால் திராவிட மாடல் ஆட்சிதான் சிறப்பான ஆட்சி என எழுதி இருப்பார். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். எல்லாரும் சமம் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி. திருப்பத்தூர் மாவட்டத்தில் தனியார்துறை மூலம் 4,700 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே மலைவாழ் மக்கள் மற்றும் நரிக்குறவர்களுக்கு அதிக அளவில் சாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நிறைந்த மாவட்டமான திருப்பத்தூரில் 10 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டதை தட்டி எழுப்பி 2,508 பேருக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு உள்ளது. பெண்களை படி படி என கூறிய இயக்கம் தி.மு.க. திருப்பத்தூர் மாவட்டத்தில்தான் அதிக பெண்கள் ஒன்றியக்குழு தலைவர்களாக உள்ளனர்.

திராவிடத்தையும், ஆன்மிகத்தையும் யாரும் பிரித்து பார்க்க முடியாது. ஆன்மிகம் என்ற பெயரை கூறி யாரும் இங்கு கடை திறக்க முடியாது. 164 அர்ச்சகர்களுக்கு ரூ.1,000 கொடுக்கும் திட்டம் இம்மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது. ரூ.11 கோடியில் 117 கோவில்கள் புனரமைக்கும் பணி நடந்து வருகிறது. மகளிர் சுயஉதவிக்குழுக்களை தமிழகத்தில் ஏற்படுத்தியது தி.மு.க. அரசுதான். அ.தி.மு.க. ஆட்சியில் அது சீரழிக்கப்பட்டது. அதன்பின் வந்த தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் 4 லட்சத்து 48 ஆயிரம் மகளிர் சுயஉதவிக்குழு இருந்தது. தற்போது உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் ஒரு லட்சம் மகளிர் சுயஉதவிக்குழு அதிகரித்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தே.பிரபாகரன், நகரமன்ற தலைவர்கள் சங்கீதாவெங்கடேஷ், காவியா விக்டர், உமாபாய் சிவாஜி கணேசன், ஏஜாஜ் அஹமத், ஒன்றியக்குழு தலைவர்கள் விஜியா அருணாசலம், திருமதி திருமுருகன், எஸ்.சத்தியா சதீஷ்குமார், சங்கீதாபாரி, வெண்மதி, சுரேஷ்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, ஜோலார்பேட்டை ஒன்றியக் குழு தலைவர் எஸ்.கே.சதிஷ்குமார், ஏலகிரி மலை ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அ.திருமால், நாட்டறம்பள்ளி பேரூராட்சி தலைவர் சசிகலா சூரியகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி நன்றி கூறினார்.

அதன் பிறகு ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் பாச்சல் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்கூடத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.


Next Story