2 வாரங்களாக குடிநீர் வினியோகிக்காததை கண்டித்து பேரூராட்சி செயல் அதிகாரியை கவுன்சிலர்கள் முற்றுகை


2 வாரங்களாக குடிநீர் வினியோகிக்காததை கண்டித்து பேரூராட்சி செயல் அதிகாரியை கவுன்சிலர்கள் முற்றுகை
x

2 வாரங்களாக குடிநீர் வினியோகிக்காததை கண்டித்து பேரூராட்சி செயல் அதிகாரியை கவுன்சிலர்கள் முற்றுகை

ஈரோடு

சென்னிமலை

சென்னிமலை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு வீடுகள் தோறும் காவிரி ஆற்று குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி சென்னிமலையை அடுத்த ஈங்கூர் ெரயில்வே பாலம் அருகில் அமைக்கப்பட்டிருந்த பிரதான காவிரி ஆற்று குடிநீர் குழாய் உடைந்து விட்டது. இதை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. 2 வாரம் ஆகியும் உடைந்த குழாய் சரி செய்யப்படாததால் சென்னிமலை பேரூராட்சி பொதுமக்கள் குடிநீருக்கு அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து சென்னிமலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயராமனிடம் வார்டு கவுன்சிலர்கள் முறையிட்டு உள்ளனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் சென்னிமலை பேரூராட்சியில் உள்ள 9 வார்டுகளை சேர்ந்த கவுன்சிலர்கள் நேற்று இரவு 7 மணி அளவில் பேரூராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் கடந்த 2 வாரங்களாக குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து பேரூராட்சி செயல் அதிகாரியை முற்றுகையிட்டனர். மேலும் அவரிடம், 'ஏன் இன்னும் உடைந்த குழாயை சரி செய்து குடிநீர் வினியோகம் செய்யாமல் இருக்கிறீர்கள்,' என கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு கவுன்சிலர்களிடம் பதில் அளித்து செயல் அதிகாரி ஜெயராமன் கூறுகையில், 'விரைவில் உடைந்த குழாய் சரி செய்யப்படும் என்றும், அதற்கு முன்பாக லாரிகள் மூலம் வார்டு பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும்,' என்றார்.

இந்த சம்பவத்தால் சென்னிமலை பேரூராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story