கார்கள்-பொருட்களை ஜப்தி செய்ய அடுத்தடுத்து வந்த கோர்ட்டு ஊழியர்களால் பரபரப்பு


கார்கள்-பொருட்களை ஜப்தி செய்ய அடுத்தடுத்து வந்த கோர்ட்டு ஊழியர்களால் பரபரப்பு
x
தினத்தந்தி 24 March 2023 12:30 AM IST (Updated: 24 March 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் வருவாய்த்துறை அலுவலகத்தில் கார்கள்-பொருட்களை ஜப்தி செய்வதற்காக கலெக்டர் அலுவலகத்துக்கு அடுத்தடுத்து கோர்ட்டு ஊழியர்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்

கலெக்டர் அலுவலகம்

திண்டுக்கல் கோவிந்தாபுரம் துரைராஜ்நகரை சேர்ந்தவர் குமாரசாமி. இவருடைய மனைவி கோமதியம்மாள் (வயது 75). கடந்த 1988-ம் ஆண்டு திண்டுக்கல்-கரூர் ரெயில் பாதை திட்டத்துக்காக கரூர் பைபாஸ் சாலையில் கோமதியம்மாளுக்கு சொந்தமான நிலம் கையகப்படுத்தப்பட்டது.

இதற்காக அரசு நிர்ணயித்த நிவாரண தொகை குறைவாக இருந்ததால், கூடுதல் தொகை கேட்டு திண்டுக்கல் முதன்மை சப்-கோர்ட்டில் கோமதியம்மாள் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் வருவாய்த்துறை அலுவலகத்தினர், ரெயில்வே நிர்வாகத்தினரிடம் இருந்து ரூ.2 லட்சத்து 59 ஆயிரத்து 85-ஐ பெற்று மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் ரூ.41 ஆயிரத்து 739 மட்டுமே வழங்கப்பட்டது. மீதித்தொகையான ரூ.2 லட்சத்து 17 ஆயிரத்து 346 தற்போது வரை வழங்கப்படவில்லை.

ஜப்தி உத்தரவு

இதனால் அவர் கோர்ட்டில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த கோர்ட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் வருவாய்த்துறை அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர், டைப்ரைட்டிங் எந்திரம், நாற்காலி உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்யும்படி உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து கோர்ட்டு ஊழியர்கள் ஜேம்ஸ், பாலகுரு மற்றும் பணியாளர்கள் நேற்று மதியம் 12.30 மணிக்கு திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் வருவாய்த்துறை அலுவலகத்தில் உள்ள நாற்காலிகள், மின்விசிறிகள், கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்யும் நடவடிக்கையில் இறங்கினர்.

ஆர்.டி.ஓ. பேச்சுவார்த்தை

இதற்கிடையே தகவலறிந்து அங்கு வந்த ஆர்.டி.ஓ. பிரேம்குமார் தலைமையிலான அதிகாரிகள், கோர்ட்டு ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நிவாரணம் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதோடு, ஏப்ரல் மாதம் வரை காலஅவகாசம் கேட்டனர். இதையடுத்து கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி நடவடிக்கையை கைவிட்டனர். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் எடுத்த நாற்காலிகளை அங்கேயே வைத்துவிட்டு திரும்பி சென்றனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு ஜப்தி முயற்சி சம்பவமும் நடந்தது.

மற்றொரு சம்பவம்

இதேபோல் பட்டிவீரன்பட்டி பகுதியை சேர்ந்தவர் விஜயராஜன் (68). கடந்த 1978-ம் ஆண்டு மருதாநதி அணை பணிக்காக இவருக்கு சொந்தமான நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதற்காக அரசு நிர்ணயித்த தொகை முழுமையாக வழங்கப்படவில்லை. இதையடுத்து விஜயராஜன் சார்பில் அவருடைய மனைவி ஜமுனா திண்டுக்கல் கூடுதல் சப்-கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு மனுதாரருக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்து 536-ஐ இழப்பீடாக வழங்கும்படி உத்தரவிட்டது.

ஆனால் இழப்பீடு வழங்காததால் ஜமுனா, கோர்ட்டில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த கோர்ட்டு, திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் வருவாய்த்துறை அலுவலகத்துக்கு சொந்தமான 3 கார்களை ஜப்தி செய்யும்படி உத்தரவிட்டது. அதன்பேரில் கோர்ட்டு ஊழியர்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தனர். அப்போது அவர்களிடம் ஆர்.டி.ஓ. பிரேம்குமார் தலைமையிலான அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பரபரப்பு

அதில் ஜமுனாவுக்கு விரைவில் இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதிஅளித்தனர். அதன்பேரில் ஜப்தி நடவடிக்கையை கைவிட்டு கோர்ட்டு ஊழியர்கள் திரும்பி சென்றனர். திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு, ஒரே நாளில் அடுத்தடுத்து 2 ஜப்தி நடவடிக்கைக்காக கோர்ட்டு ஊழியர்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story