துணை சுகாதார நிலையத்தை விரைவில் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்
துணை சுகாதார நிலையத்தை விரைவில் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்
ஆலடிக்குமுளை ஊராட்சியில் ரூ.20 லட்சத்தில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையத்தை விரைவில் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பட்டுக்கோட்டைக்கு செல்லும் அவலம்
பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆலடிக்குமுளை ஊராட்சியில் பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு முக்கியமான சாலைகள் உள்ளன. ஆலடிக்குமுளை, சுராங்காடு, வீரக்குறிச்சி, சஞ்சாயநகர், நறுவழி கொல்லை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் அவசர நேரத்தில் ஆஸ்பத்திரி செல்வதற்கு பட்டுக்கோட்டை அல்லது கரம்பயத்திற்கு வர வேண்டும். இதனால் அந்த பகுதி மக்கள் சிரமப்பட்டு வந்தனர். பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிக அளவில் செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வாகன ஓட்டிகள் காயமடைந்து வருகின்றனர். இவர்கள் முதல் உதவி பெறுவதற்கு கூட பட்டுக்கோட்டைக்கு தான் செல்ல வேண்டு்ம். எனவே ஆலடிக்குமுளை ஊராட்சியில் துணை சுகாதார நிலையம் கட்டித்தர வேண்டும் என்று அந்தபகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
விரைவில் திறக்க வேண்டும்
இதனை ஏற்று தமிழ்நாடு சுகாதாரத்துறை மூலம் ரூ.20 லட்சம் செலவில் ஆலடிக்கு முளை சமத்துவபுரம் பகுதியில் புதிய துணை சுகாதார நிலைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த கட்டிடம் இன்னும் திறக்கப்படாமல் இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரூ.20 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள துணை சுகாதார நிலையத்தை விரைவில் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.