தொடர் மழையால் சேதமடைந்த ஏக்கல்நத்தம் மலை கிராம தார்சாலை
70 ஆண்டுகளாக போராடி கிடைத்தும் ஏக்கல்நத்தம் மலை கிராம தார்சாலை தொடர் மழையால் பல இடங்களில் சேதமடைந்துள்ளது. இந்த சாலை சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
70 ஆண்டுகளாக போராடி கிடைத்தும் ஏக்கல்நத்தம் மலை கிராம தார்சாலை தொடர் மழையால் பல இடங்களில் சேதமடைந்துள்ளது. இந்த சாலை சீரமைக்கப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
மலை கிராமம்
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது நாரலப்பள்ளி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்டது ஏக்கல்நத்தம் மலை கிராமம். இந்த கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் 700-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.
சுதந்திரம் அடைந்த காலம் முதல் இந்த கிராமத்திற்கு சாலை வசதி இல்லை. குறிப்பாக தேர்தல் காலத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களை தலையில் சுமந்தபடியும், கழுதை மீது ஏற்றியும் கொண்டு சென்று வந்தனர். இந்த கிராம மக்கள் தங்களுக்கு சாலை வசதி வேண்டும் என்று 70 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
நீண்ட காலம் நீடிக்கவில்லை
மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் புறக்கணிப்பு போராட்டங்களிலும், கருப்பு கொடி ஏந்தியும் பொதுமக்கள் போராட்டங்களை நடத்தினார்கள். இந்த கிராமத்திற்கு செல்லும் பகுதி வனப்பகுதியாக இருப்பதால் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு அங்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டது. இதனால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அவர்களின் மகிழ்ச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. சமீபத்தில் பெய்த மழையில் அந்த சாலையில் ஆங்காங்கே விரிசல், அரிப்பு ஏற்பட்டு பள்ளங்கள் விழுந்துள்ளது. மேலும் பல இடங்களில் தடுப்பு சுவர்கள் இடிந்துள்ளன.
இதனால் அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர். பல இடங்களில் தடுப்பு சுவர் உடைந்து, தார்சாலை பெயர்ந்து உள்ள இந்த சாலையில் மக்கள் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் இந்த சாலை சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
முன்னோர்கள்
ஏக்கல்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த இல்லத்தரசி கனகராஜி:-
எங்கள் கிராமம் மலைப்பகுதியில் அமைந்துள்ளது. சாலை வசதியே இல்லாமல் நாங்கள் சிரமப்பட்டு வந்தோம். எங்கள் கிராமத்திற்கு சாலை வேண்டும் என்று நாங்கள் சந்திக்காத அதிகாரிகளே இல்லை. 50 ஆண்டுகளுக்கும் மேலாக எங்களின் முன்னோர்கள் போராடி இந்த சாலை எங்களுக்குகிடைத்தது.
சமீபத்தில் பெய்த மழையால் இந்த சாலை சேதமடைந்தது. இதனால் நாங்கள் மலை கிராமத்தில் இருந்து கீழே வர முடியவில்லை. இருசக்கர வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே மழையால் சேதமடைந்துள்ள மலை கிராம சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாலையில் பள்ளம்
ஏக்கல்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவிவசாயி முருகன்:-
எங்கள் ஊருக்கு 70 ஆண்டுகளாக போராடி சாலை வசதி கிடைத்தது. விவசாயிகள் இந்த சாலையை பயன்படுத்தி வேப்பனப்பள்ளி, மகராஜகடை, கிருஷ்ணகிரி நகரங்களுக்கு சென்று வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் சாலையில் அரிப்பு ஏற்பட்டு ஆங்காங்கே விரிசல் மற்றும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் பக்கவாட்டில் தடுப்பு சுவர்கள் உடைந்துள்ளன. ஆபத்தான முறையில் நாங்கள் பயணிக்கிறோம். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4 சக்கர வாகனங்கள் செல்ல முடியாது
அதே ஊரை சேர்ந்த டிரைவர் ராமகிருஷ்ணன்:- கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என ஒரு பழமொழி உண்டு. அதை போல தான் ஏக்கல்நத்தம் கிராம மக்களின் இன்றைய நிலையும் உள்ளது. 70 ஆண்டுகளாக சாலை வசதி கிடைக்காதா என போராடி கிடைத்த சாலை சமீபத்தில் பெய்த மழையால் மிகவும் சேதமடைந்துள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமே செல்ல முடிகிறது. 4 சக்கர வாகனங்களை அந்த வழியாக ஓட்ட முடியவில்லை. எனவே அந்த சாலையை அதிகாரிகள் பார்வையிட்டு சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை வேண்டும். அடுத்து மழை பெய்தாலும் சாலை பாதிக்காத வகையில் திட்டமிட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
அச்சத்தில் உள்ளோம்
ஏக்கல்நத்தத்தைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தி:-
எங்கள் கிராம மக்கள் மருத்துவ உள்ளிட்ட அவசிய தேவைகளுக்கு கிருஷ்ணகிரி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்கிறார்கள். சமீபத்தில் பெய்த மழையால் சாலை முழுமையாக பழுதடைந்துள்ளது. இதனால் விபத்துகள் நடந்து விடுமோ என்ற அச்சத்தில் நாங்கள் இருக்கிறோம். எனவே அதிகாரிகள் இந்த பகுதிக்கு வந்து சாலையை பார்வையிட்டு சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.