தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை, அறிவியல் கல்லூரி மாணவிகள் சாதனை
தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை, அறிவியல் கல்லூரி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) மாணவிகள், பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான டேக்வாண்டோ போட்டி புதுக்கோட்டையில் உள்ள சுதர்சன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட கல்லூரியில் இருந்து மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இப்போட்டியில் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் தங்கப்பதக்கமும், வெள்ளிப்பதக்கமும் பெற்று ஒட்டு மொத்தமாக இரண்டாம் இடத்தையும் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
மேலும், மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பை பெரம்பலூர் மாவட்டம் தடகள சங்கம் சார்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் எம்.ஜி.ஆர். மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் பங்குப் பெற்று ரூ.1,58,000 பரிசு தொகையைபெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்தனர். கல்லூரிகளுக்கு இடையேயான கூடைப்பந்து மற்றும் வளைகோல்பந்து போட்டிகளில் முதல் இடமும், கபடி போட்டியில் 2-ம் இடமும், கால்பந்து மற்றும் கூடைப்பந்து போட்டிகளில் 3-ம் இடமும், தடகள போட்டிகளில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 2, 3-ம் இடமும், உயரம் தாண்டுதல் போட்டியில் 3-ம் இடமும், சிலம்பம் போட்டியில் 3-ம் இடமும் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர். மேலும் ஒவ்வொரு வெற்றிபெற்ற அணியில் இருந்தும் 32 மாணவிகள் மாநில அளவில் நடைபெற உள்ள போட்டிக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
இப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவிகளையும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் மாண்பமை வேந்தர் சீனிவாசன் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.