அகரம்சேரி பாலாற்றில் தற்காலிக சாலை
அகரம்சேரி பாலாற்றில் அமைக்கப்பட்ட தற்காலிக சாலை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது.
அணைக்கட்டு
அகரம்சேரி பாலாற்றில் அமைக்கப்பட்ட தற்காலிக சாலை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது.
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அகரம்சேரி சின்ன சேரி, கொல்லமங்கலம், பள்ளிக்குப்பம், கூத்தம்பாக்கம் ஆகிய ஊராட்சிகள் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியத்தில் இருந்து வந்தன. கடந்த ஓராண்டுக்கு முன்னர் மேற்கண்ட 5 ஊராட்சிகளும் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டன.
5 ஊராட்சிகளில் உள்ள பொதுமக்கள் கூடநகரம் ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாத்திரைகளை வாங்கி வருகின்றனர். அவர்கள் மாதனூர் பாலாற்றில் அமைக்கப்பட்டிருந்த பாலத்தின் வழியாக மறுகரையில் உள்ள கூடநகரத்துக்கு சென்று வந்்தனர். ஆனால் பாலம் இடிந்து விழுந்ததால் பள்ளிகொண்டாவிற்கு வந்து அதன்பின்னர்தான் கூடநகரத்துக்கு 24 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டியுள்ளது. எனவே அகரம்சேரி பாலாற்றின் குறுக்கே பாலம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் அகரம்சேரியில் தோட்டக்கலை துறை சார்பில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு மேற்கொள்வதற்காக கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வந்தார். அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அகரம்சேரி பாலாற்றின் குறுக்கே பாலம் கட்டி தரவேண்டும் என அவரிடம் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று தரைப்பாலம் கட்டி தருவதாக உறுதி அளித்து விட்டுச் சென்றார்.
இதனை தொடர்ந்து அகரம்சேரி ஊராட்சி மன்றம், ஒன்றிய குழு மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் அகரம்சேரி பாலாற்றின் குறுக்கே தற்காலிகமாக பத்துக்கும் மேற்பட்ட உரைகளை வைத்து மண் சாலையுடன் பாலம் அமைக்கும் பணி நடைபெற்றது.
அந்தப் பணி நிறைவு பெற்றதையடுத்து பயன்பாட்டிற்கு விடப்பட்டது. இதனால் பொதுமக்கள்மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
==========