எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிட கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிட கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்ட நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். டிட்டோஜாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நீலகண்டன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அந்தோணி எட்வர்ட்ராஜ், மாநகர வட்டார தலைவர் ஜீவானந்தன், தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சந்திரசேகரன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் பொன்னுசாமி, தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் உள்பட ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 'பேச்சுவார்த்தையில் அளிக்கப்பட்ட உறுதிக்கு மாறாக பி.எட். பயிற்சி மாணவர்களை பள்ளிகளுக்கு ஆய்வுக்கு அனுமதிப்பதை கைவிடக்கோரியும், எண்ணும் எழுத்தும் திட்டத்தை முழுவதுமாக கைவிட வலியுறுத்தியும், பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தை 3 மாதத்திற்கு ஒரு முறை கூட்ட வலியுறுத்தியும்' ஆர்ப்பாட்டத்தின்போது கோஷங்கள் எழுப்பப்பட்டன.