தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் 3-வது நாளாக உண்ணாவிரத போராட்டம்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் 3-வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
கரூர்,
கரூர் மாவட்ட கல்வித்துறையில் ஒன்றியம் விட்டு வேறு கல்வி மாவட்டத்திற்கு பல கிலோ மீட்டர் தொலைவிற்கு பணிமாறுதல் ஆணைகளை வழங்கிய கரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மீது உரிய விசாரணை மேற்கொண்டு துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டியும், பணிமாறுதல் செய்யப்பட்ட 6 ஆசிரியர்களின் மாறுதல் ஆணைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டியும் கரூர் தாலுகா அலுவலகம் முன்பு 3-வது நாளாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மேற்கு மண்டலம் சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில துணைத்தலைவர் ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார். குளித்தலை கல்வி மாவட்ட தலைவர் ஜான்சன் வரவேற்று பேசினார். உண்ணாவிரத போராட்டத்தை மாநில தலைவர் மணிமேகலை தொடங்கி வைத்தார். இதில், மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.பின்னர் மாநில தலைவர் மணிமேகலை நிருபர்களிடம் கூறுகையில், பணி மாறுதல் செய்யப்பட்ட 6 ஆசிரியர்களின் மாறுதல் ஆணைகளை உடனடியாக ரத்து செய்ய கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் இதற்கு காரணமான மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், மாநில செயற்குழு கூட்டத்தை கூட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.