அமைதி பூங்காவாக தமிழ்நாடு திகழ்கிறது; சட்டசபையில் முதல்-அமைச்சர் பேச்சு


அமைதி பூங்காவாக தமிழ்நாடு திகழ்கிறது; சட்டசபையில் முதல்-அமைச்சர் பேச்சு
x

தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று முன்தினம் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தில் பங்கேற்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட மொத்தம் 12 பேர் பேசினார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மொத்தம் 1 மணி நேரம் 13 நிமிடங்கள் அவர் உரையாற்றினார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

சாதி சண்டைகள் இல்லை

மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர்கள் அனைவரும் இந்த மாநிலத்தில் என்னென்ன இருக்கிறது என்று பேசினார்கள். என்னென்ன இல்லை என்பதைச் சொல்வதாக என்னுடைய உள்துறை அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் சாதி சண்டைகள் இல்லை. மத சண்டைகள் இல்லை. கூட்டு வன்முறைகள் இல்லை. கலவரங்கள் இல்லை. துப்பாக்கி சூடு இல்லை. காவல் நிலைய மரணங்கள் இல்லை. இப்படி இல்லை, இல்லை, இல்லை என்றுதான் என்னால் சொல்ல முடியும்.

இதெல்லாம் இல்லை என்பதற்கு அடையாளமாகத்தான் புதிய தொழிற்சாலைகள் வருகின்றன. புதிய முதலீடுகள் வருகின்றன. புதிய நிறுவனங்கள் வருகின்றன. அனைத்து துறைகளிலும் வளர்ச்சி வருகிறது. ஆட்சிக்கு நல்ல பெயர் வருகிறது. "அமைதியான மாநிலம் தமிழ்நாடு" என்ற நற்பெயர் வருகிறது. ஒரு மாநிலம் வளருகிறது என்றால், அது அமைதியான மாநிலமாக இருக்கிறது என்று பொருள்.

தமிழ்நாடு அமைதி பூங்கா

தமிழ்நாடு காவல் துறை நுண்ணறிவு பிரிவின் ஒரு அங்கமாக விளங்கும் சிறப்பு பிரிவின் நுண்ணறிவு தகவல்களின்படி விரைவாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் மூலம் மத ரீதியான மோதல்கள் எதுவுமின்றி தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்ந்து வருகிறது.

சட்டம்-ஒழுங்கை பேணி, பொதுமக்களிடம் அச்ச உணர்வைப் போக்கி இருக்கிறது நமது அரசு. எந்தவித குறுக்கீடும் இன்றி காவல் துறையை செயல்பட அனுமதித்துள்ளோம். இதனால்தான் சமூகவிரோதிகள், கொள்ளையர்கள், வன்முறையாளர்கள் உடனுக்குடன் கைது செய்யப்படுகிறார்கள்.

மாநில காவல் துறையினர் சட்டம்-ஒழுங்கை, தொடர்ந்து சிறப்பாக பராமரித்து வருவதோடு, குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தமிழ்நாட்டில் சாதி, சமய வெறியர்கள், சமூக விரோதிகள் மீது அரசு மேற்கொண்ட கடும் நடவடிக்கைகள் காரணமாக, சாதி, சமய பூசல்கள் ஏதுமின்றி மாநிலத்தில் அமைதி நிலவுகிறது.

கடுமையான நடவடிக்கை

காவல்துறையினர், மாநிலம் முழுவதும், குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் ரவுடிகள் மற்றும் கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்து கொலை, கொள்ளை மற்றும் சமுதாய குற்றங்களில் ஈடுபடுவோர் மீதும், ஆட்களை கடத்தி பணம் பறித்தல், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை, மணல் மற்றும் ரேஷன் அரிசி கடத்துதல், கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபடுதல், அதிக வட்டி வசூலித்தல் போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீதும், கஞ்சா, நிதி நிறுவன மோசடி, சைபர் குற்றங்கள், சமூக வலைதளங்களில் வதந்திகளைப் பரப்புவோர் ஆகியோர் மீதும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து, அவர்களைத் தடுப்பு காவலில் அடைத்து வருகின்றனர். குற்றம் நடந்ததும் உடனடியாக நடவடிக்கை எடுப்பதால் குற்றங்கள் குறைந்துள்ளன.

காவல்துறையினர் எந்தவித குறுக்கீடும் இன்றி சுதந்திரமாக செயல்படுகிறார்கள். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை சிறப்பாக பராமரித்து குற்றங்களில் ஈடுபடுவோர் யாராயினும் அவர்கள்மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

முதல் இடத்தை தக்கவைக்க வேண்டும்

அதனால், புதிய முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டைத் தேடி வரக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறோம். தொழில் பெருகி, நம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. ஆகவே, மாநிலத்தின் வளர்ச்சியில் தமிழ்நாடு காவல்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. அதுவும் குறிப்பாக, 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி காலத்திற்கு பிறகு, தமிழ்நாடு காவல்துறை "ஸ்காட்லான்ட் யார்டு" காவல்துறைக்கு இணையாக சிறப்பாக பணியாற்றி வருகிறது.

அத்தகைய சுதந்திரத்தை காவல் துறைக்கு இந்த அரசு கொடுத்திருக்கிறது. 2 ஆண்டுகள் தமிழ்நாடு காவல் துறை நிகழ்த்திய சாதனைகளுடன் திருப்தி அடையக்கூடியவன் அல்ல நான். அகில இந்திய அளவில் தமிழ்நாடு காவல் துறை இப்போது பிடித்துள்ள முதலிடத்தைத் தொடர்ந்து தக்கவைக்க வேண்டும் என்பதே இந்த அரசினுடைய இலக்கு. அதற்கு இந்த அரசு முழு முயற்சி எடுக்கும்.

முன்னேற்றப்பாதை

தமிழ்நாடு காவல் துறையின் கடினமான பணியை, நம் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நன்கு உணர்வார்கள். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த வேண்டுகோளை வைக்கிறேன்.

அவரவர் தொகுதியில் சட்டம்-ஒழுங்கு பணியில் நியாயமாக, நேர்மையாக நடக்கும் காவலர்களை, காவல் துறை அதிகாரிகளை நீங்களும் மனதார பாராட்டி, அவர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளிக்க வேண்டும். தமிழ்நாடு காவல் துறை, இந்தியாவில் முதலிடத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளும் அளவிற்கு உதவிட வேண்டும். காவல் துறைக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமையும், காவல் துறையினர் நம் மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளும் இணைந்து, நமது 'திராவிட மாடல்' ஆட்சியில் தமிழ்நாட்டை முன்னேற்றப்பாதையில் நிச்சயம் கொண்டு செல்லும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story