தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை 8-ந்தேதி முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார்


தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை 8-ந்தேதி முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார்
x

புதிய திட்டங்களை தொடங்கவும், விளையாட்டு வீரர்கள்-வீராங்கனைகளை ஊக்குவிக்கவும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 8-ந்தேதி தொடங்கி வைக்கிறார்.

சென்னை,

சென்னையில், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடர்பாக தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தேசிய மற்றும் தனியார் வங்கிகள், மத்திய, மாநில பொது நிறுவனங்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்களைச் சார்ந்த பிரதிநிதிகளுடன் கலந்துரையாடும் நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்வில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது:-

விளையாட்டு நம் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது, நமது உடல் மற்றும் மனரீதியாக பல நன்மைகளை ஏற்படுத்துகின்ற விளையாட்டு நமது சமூகத்தின் ஒற்றுமையை ஊக்குவிக்கிறது. தமிழ்நாட்டில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை சார்பில் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு தமிழ்நாட்டை விளையாட்டின் தலைநகராக மாற்ற வேண்டும் என்ற லட்சியத்தோடு செயல்பட்டு வருகிறது.

புதிய திட்டங்களை தொடங்கவும், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளை ஊக்குவிக்கவும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் பவுண்டேஷன் எனும் அறக்கட்டளையை தொடங்கியுள்ளோம். விளையாட்டுத்துறை சிறப்பாக இயங்க அதற்கு நிதி ஆதாரம் என்பது மிக மிக அவசியமான ஒன்று. எனவே, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் விளையாட்டு வீரர்கள்-வீராங்கனைகளுக்கு உதவ முடிவு செய்து தொடங்கவுள்ளோம். இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 8-ந்தேதி சென்னையில் தொடங்கி வைக்கிறார்.

நம்பிக்கை

இந்த குறிப்பிடத்தக்க தமிழ்நாடு அரசின் முன் முயற்சிக்கு உங்கள் அனைவரின் ஆதரவையும் கோருகிறேன். மக்கள் வளர்ச்சிக்கு அரசின் ஆதரவு மிக முக்கியமானது. விளையாட்டு வளர்ச்சியினை உருவாக்கிட நியாயமான கிராமப்புற விளையாட்டு திறமைகளை கண்டறியும் வகையில் விளிம்பு நிலை இளைஞர்கள், எங்களிடம் உள்ளனர். தமிழ்நாட்டில் விளையாட்டுத் திறனை மேம்படுத்த தமிழ்நாடு தொழில் துறையினர் உரிய பங்களிப்பை அளித்திட இதுவே சரியான தருணம். சி.எஸ்.ஆர். நிதி மூலம் பல விளையாட்டு வீரர்களுக்கு பல வழிகளில் நிதிஉதவி செய்து நிறுவனங்கள் பங்களிக்க முடியும்.

தமிழ்நாட்டில் தொழில்துறை சிறந்து விளங்குகிறது. தமிழ்நாட்டின் தொழில் நிறுவனங்கள் மூலம் முழு ஆதரவுடன் தமிழ்நாடு ஒரு பொருளாதார சக்தியாக மாறியுள்ளது. இப்போது உங்களின் முழு ஆதரவுடனும் பங்களிப்புடனும் தமிழகத்தை ஒரு விளையாட்டு சக்தியாக மாற்றுவதற்கான நேரம் இது. உங்களில் பலர் ஏற்கனவே சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு உங்கள் ஆதரவை வழங்கியுள்ளதை குறிப்பிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களில் பலர் விரைவில் பங்களிப்பை வழங்குவீர்கள். இது எனக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. ஒரு குறுகிய காலகட்டத்தில் நடந்துள்ள இந்த நிகழ்வு மற்றும் இப்படியான முயற்சி எனக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய கூடுதல் தலைமைச்செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் கிருஷ்ணன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story