தமிழ் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி
தமிழ் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்த தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில், அரியலூர் மாவட்டம் கருப்பூர் விநாயகா கல்வியியல் கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி தலைமை தாங்கினார். இதில் எழுத்தாளர் மதுக்கூர் ராமலிங்கம் தமிழ் வேரும் விழுதும் என்ற தலைப்பின் கீழும், பாடலாசிரியர் யுகபாரதி அகமும் புறமும் என்ற தலைப்பின் கீழும் கல்லூரி மாணவ- மாணவிகளிடம் விளக்க உரையாற்றினார்கள்.
தொடர்ந்து தமிழ்க்கனவு நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ-மாணவிகளிடம் உரையாற்றிய தலைப்பிலிருந்து மாணவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. சிறப்பாக பதிலளித்த மாணவ-மாணவிகளுக்கு கேள்வியின் நாயகன், கேள்வியின் நாயகி பட்டங்கள் வழங்கப்பட்டு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் புத்தகங்களும் பரிசாக வழங்கப்பட்டன. தொடர்ந்து மாணவர்கள் சிறப்பாக கல்வி கற்பதுடன் தமிழர்களின் பண்பாட்டு மரபினை அனைவரும் அறிந்து பிறருக்கும் தெரிவிக்க வேண்டும் எனவும் பாடலாசிரியர் யுகபாரதி பேசினார். முன்னதாக, மாபெரும் தமிழ்க் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித் துறை, மகளிர் திட்டம், மாவட்ட தொழில் மையம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, மாவட்ட முன்னோடி வங்கி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில் அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பூங்கோதை, வட்டாட்சியர்கள் கண்ணன், சந்துரு, கல்லூரி தாளாளர் பாஸ்கர், மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.