சாமிநாதசாமி கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா
சுவாமிமலை சாமிநாதசாமி கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சுவாமிமலை சாமிநாதசாமி கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சாமிநாதசாமி கோவில்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சாமிநாதசாமி கோவில் உள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாக இக்கோவில் கருதப்படுகிறது.
இங்கு முருகப்பெருமான் 'தகப்பன்சுவாமி' என அழைக்கப்படுகிறார். முருகன் குருவாகி இருந்து அருளியதால் குருமலை என்றும், கந்தாசலம், சிரகிரி, சிவமலை என்றும் அழைக்கப்படுகிறது. இறைவன் இங்கு சாமிநாதனாக இருப்பதால் சாமிமலை என்ற பெயர் ஏற்பட்டது. இங்கு சிவன் சுந்தரேஸ்வரர், தாயார் மீனாட்சியுடன் அருள்பாலிக்கிறார்.
இங்கு ஆண்டுதோறும் திருக்கார்த்திகை திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருக்கார்த்திகை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
உற்சவ மண்டபம் எழுந்தருளுதல்
இதனை முன்னிட்டு நேற்று விக்னேஸ்வர பூஜை நடந்தது. அப்போது விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், பரிவார தெய்வங்களுடன் சாமிநாதசாமி மலை கோவிலில் இருந்து படி இறங்கி உற்சவ மண்டபம் எழுந்தருளினார். இரவு வீதி உலா நடந்தது. விழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 1-ந் தேதி (வியாழக்கிழமை) ்்வரை படிச்சட்டத்திலும், வாகனத்திலும் சாமி புறப்பாடு நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) பஞ்ச மூர்த்திகளுடன் 5 சப்பரத்தில் சாமி வீதி உலா நடைபெறுகிறது.
தேரோட்டம்
6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) திருக்கார்த்திகை அன்று தேரோட்டமும், தங்கமயில் மற்றும் வெள்ளி மயில் வாகனத்தில் சாமி புறப்பாடும், சொக்கப்பனை கொளுத்துதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. மறுநாள் 7-ந் தேதி (புதன்கிழமை) தீர்த்தவாரி நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு போலீஸ்துறை சுகாதாரத்துறை, பேரூராட்சி, தீயணைப்புத்துறை, போக்குவரத்து துறை, பொதுப்பணித்துறை, மின்சார துறை, தொலைதொடர்புத் துறை உள்ளிட்ட அரசு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். கோவிலில் பக்தர்களுக்கான வசதிகளை இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் உமாதேவி, கண்காணிப்பாளர்கள் சுதா, பழனிவேல் உள்ளிட்டோர் செய்து வருகிறார்கள்.