சிறுவாபுரி முருகன் கோவிலில் சூரசம்ஹாரம்
சிறுவாபுரி முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது.
சிறுவாபுரி முருகன் கோவில்
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் புகழ் பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருணகிரிநாதரால் பாடல் பெற்றது ஆகும்.
இந்த கோவிலுக்கு தொடர்ந்து 6 வாரங்கள் வந்து விளக்கேற்றி வழிபட்டால் வீடு, மனை, உத்தியோகம், வியாபாரம், திருமணயோகம் உள்ளிட்டவை தடையின்றி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
இவ்வாறு சிறப்புமிக்க, இந்த கோவிலுக்கு 19 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஆகஸ்டு மாதம் 21-ந்தேதி ரூ.1 கோடியே 25 லட்சம் செலவில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சூரசம்ஹாரம்
இந்த கோவிலில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த கந்த சஷ்டி விழா கடந்த 25-ந் தேதி தொடங்கியது. நாள்தோறும் கோவில் வளாகத்தில் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற்றது. நேற்று முன்தினம் முருக பெருமானுக்கு அபிஷேகமும், மாலை வேல் வாங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. சூரசம்ஹார நிகழ்ச்சி கோவில் எதிரே சன்னதி தெருவில் நடைபெற்றது.
நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் சித்ராதேவி தலைமையில், கோவில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார் மற்றும் பலர் சிறப்பாக செய்திருந்தனர்.
பள்ளிப்பட்டு
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு சங்கமேஸ்வரர் சாமி கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று சூரசம்ஹாரத்தையொட்டி வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன் பிறகு தீபாராதனை நடைபெற்றது. இதில் பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.