மாணவ-மாணவிகளுக்கு கோடைகால நீச்சல் பயிற்சி
திண்டுக்கல்லில், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாணவ-மாணவிகளுக்கு கோடைகால நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது.
நீச்சல் பயிற்சி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் கோடைகால பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் மாணவ-மாணவிகள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக தினமும் ஒரு மணி நேரம் வீதம் மொத்தம் 12 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் முதல்கட்ட பயிற்சி, கடந்த 4-ந்தேதி தொடங்கி வருகிற 16-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது.
இதையடுத்து 18-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையும், மே 2-ந்தேதி முதல் 14-ந்தேதி வரையும், 15-ந்தேதி முதல் 28-ந் தேதி வரையும், 30-ந்தேதி முதல் ஜூன் 11-ந்தேதி வரையும் நீச்சல் பயிற்சி நடைபெறுகிறது. இதில் மாணவ-மாணவிகளுக்கு காலை 7 மணி முதல் 8 மணி வரையும், 8 மணி முதல் 9 மணி வரையும், மாலை 4 மணி முதல் 5 வரையும், பெண்களுக்கு மதியம் 1 மணி முதல் 2 மணி வரையும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் விரும்பும் நேரத்தில் பயிற்சியில் பங்கேற்கலாம்.
ரூ.1,500 கட்டணம்
இதில் நீச்சல் தெரியாதவர்களுக்கு நீச்சல் கற்றுத் தரப்படுவதோடு, நீச்சல் தெரிந்தவர்களுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இதற்காக முறையாக பயற்சி பெற்ற பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதில் ஒருவர் 12 நாட்கள் பயிற்சி பெறுவதற்கு ரூ.1,500 மற்றும் 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி செலுத்த வேண்டும். இதில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள், பெண்கள் ஆதார் அட்டை நகலுடன் மாவட்ட விளையாட்டு அரங்குக்கு நேரில் வரலாம் என்று மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ்பாத்திமா மேரி தெரிவித்துள்ளார்.