கொடைக்கானலில் 'மலைகளின் இளவரசி'க்கு மகுடம் சூட்டிய மலர் கண்காட்சி


‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் கோடைவிழா- மலர் கண்காட்சி கோலாகலமாக நேற்று தொடங்கியது.

திண்டுக்கல்

கொடைக்கானல்:

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் கோடைவிழா- மலர் கண்காட்சி கோலாகலமாக இன்று தொடங்கியது.

கோடைவிழா-மலர் கண்காட்சி

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானல் சிறந்த கோடைவாசஸ்தலம் ஆகும். சர்வதேச சுற்றுலாதலமாக திகழும் இங்கு, ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை குளு, குளு சீசன் நிலவுவது வழக்கம். இந்த காலக்கட்டத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும்.

தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இங்கு படையெடுப்பர். கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், ஆண்டுதோறும் கோடைவிழா-மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

கொரோனா பரவல் எதிரொலியாக, கடந்த 2 ஆண்டுகளாக கொடைக்கானலில் கோடைவிழா நடத்தப்படவில்லை. இந்தநிலையில், இந்த ஆண்டு கோடைவிழா நடத்த திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி 2 ஆண்டுகளுக்கு பிறகு, கொடைக்கானலில் 59-வது கோடைவிழா-மலர் கண்காட்சி இன்று கோலாகலமாக தொடங்கியது.

உலகிலேயே சிறந்த சுற்றுலாதலம்

சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலை, மலைப்பயிர்கள் துறை சார்பில் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடந்த கோடை விழாவுக்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி கலந்து கொண்டு கோடைவிழாவை தொடங்கி வைத்தார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மலர் கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

விழாவில் அமைச்சர் இ.பெரியசாமி பேசுகையில், உலகத்திலேயே மிக சிறந்த சுற்றுலாதலமாக கொடைக்கானல் திகழ்கிறது. ஆங்கிலேயர் மட்டுமே வந்து சென்ற காலத்தில், காஷ்மீருக்கு அடுத்தபடியாக அதிக வெளிநாட்டினர் கொடைக்கானலுக்கு தான் வந்து சென்றுள்ளனர். இந்தியாவின் முக்கிய தலைவர்கள் பலர் இங்கு வந்திருக்கிறார்கள்.

இளைஞர்களை உற்சாகப்படுத்தும் வகையில், தற்போது சாகச சுற்றுலா கொடைக்கானலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதியில் விளையும் வெள்ளைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தோட்டக்கலை துறை சார்பில் கொடைக்கானலில், 1,300 ஏக்கர் பரப்பளவில் நவீன வெள்ளைப்பூண்டு விவசாய சாகுபடி திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது என்றார்.

மேலும் ஒரு வழித்தடம்

விழாவில் அமைச்சர் எம்.ஆர்.ேக.பன்னீர்செல்வம் பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளில் பிரையண்ட் பூங்காவுக்கு 6 லட்சத்து 23 ஆயிரம் சுற்றுலாபயணிகள் வந்துள்ளனர். இதன் மூலம் சுமார் ரூ.5 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்றார்.

விழாவில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி பேசும்போது, கொடைக்கானலுக்கு வந்து செல்ல 2 வழித்தடங்கள் மட்டுமே உள்ளன. மேலும் ஒரு வழித்தடம் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். மன்னவனூர் கிராமத்தில் உள்ள சூழல் சுற்றுலா மையத்தில் கூடுதல் வசதிகள் செய்து தரப்படும்.

சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் கூடுதல் விடுதிகள் கட்டப்படும். வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் கூட்டுறவு பயிற்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கொடைக்கானல் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய மாஸ்டர் பிளான் திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஹெலிகாப்டர் தளம்

சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேசும்போது, தமிழகத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் 15 இடங்களை தேர்வு செய்து, அங்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதன்படி கொடைக்கானலை அடுத்த மன்னவனூர் கிராமத்தில் உள்ள சூழல் சுற்றுலா பகுதியில் ரூ.1¼ கோடி செலவில் சாகச சுற்றுலாத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

வில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சின்னபள்ளம் பகுதியில், 1¼ ஏக்கரில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட உள்ளது. மேலும் ஹெலிகாப்டரில் கொடைக்கானல் நகரை சுற்றிப் பார்ப்பதற்கான திட்டமும் பரிசீலனையில் உள்ளது. கொடைக்கானல் நகரில் இருந்து முக்கியமான பகுதிகளுக்கு ரோப்கார் இயக்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. சுற்றுலா பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், கூடாரம் அமைத்து தங்குவதற்காக தனியாக திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார் என்றார்.

தமிழகத்துக்கு 2-வது இடம்

விழாவில் சுற்றுலாத்துறை மேலாண்மை இயக்குனர் சந்தீப் நந்தூரி பேசுகையில், கொரோனா காலத்திலும் தமிழகத்துக்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். அதன்படி தேசிய அளவில் சுமார் 14 கோடி பேர் வருகை புரிந்தனர். சுற்றுலா பயணிகளின் வருகையில், தமிழகம் 2-வது இடத்தை பிடித்துள்ளது.

அதிலும், கடந்த ஆண்டு 75 லட்சம் சுற்றுலா பயணிகள் தமிழகத்துக்கு வந்து சென்றுள்ளனர். மாநிலம் முழுவதும் சுமார் 30 இடங்களில் சூழல் சுற்றுலா திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்றார்.

விழாவில் வேலுசாமி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் இ.பெ.செந்தில்குமார், காந்திராஜன், தோட்டக்கலைத்துறை மேலாண்மை இயக்குனர் பிருந்தா தேவி, போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், மாவட்ட வன அலுவலர் திலீப், கொடைக்கானல் நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன், ஒன்றியக்குழு தலைவர் சுவேதாராணி கணேசன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கொடைக்கானல் நகர தி.மு.க.செயலாளர் முகமது இப்ராஹிம், ஒன்றிய செயலாளர்கள் கருமலைபாண்டி, ராஜதுரை, கொடைக்கானல் கீழ்மலை ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஏ.சி.அய்யப்பன், கொடைக்கானல் அரசு வக்கீல்கள் முனியாண்டி, சக்திவேல் ஆசேர் மோகன், தி.மு.க. முன்னாள் மாவட்ட பிரதிநிதிகள் டார்லிங் அப்துல்லா, அஜ்மல்கான், நகராட்சி கவுன்சிலர்கள் தேவி செல்வராஜ், இருதயராஜா, வில்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாக்கியலட்சுமி ராமச்சந்திரன், வடகவுஞ்சி ஊராட்சி துணைத்தலைவர் சிவபாலன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேசன், மன்னவனூர் சூழல் சுற்றுலா வனக்குழு தலைவர் பழனிசாமி, உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர். முன்னதாக தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பாண்டியராஜன் வரவேற்றார். முடிவில் சுற்றுலா அலுவலர் (பொறுப்பு) சிவராஜ் நன்றி கூறினார்.

பூத்துக்குலுங்கும் பூக்கள்

கொடைக்கானலில் நிலவும் குளு, குளு சீசனை அனுபவிக்க, கடந்த மாதம் முதற்கொண்டே சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. கோடைவிழா-மலர் கண்காட்சியையொட்டி நேற்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

நேற்று தொடங்கிய மலர் கண்காட்சி 'மலைகளின் இளவரசி'க்கு மகுடம் சூட்டியது மட்டுமின்றி, சுற்றுலா பயணிகளையும் குதூகலம் அடைய செய்தது என்றால் அது மிகையல்ல. திரும்பி பார்க்கும் திசை எல்லாம் பிரையண்ட் பூங்காவில் பல வண்ண பூக்களின் எழில்கொஞ்சும் அணிவகுப்பாக உள்ளது.

சுமார் 2 லட்சம் மலர்செடிகளில் பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. குறிப்பாக இந்த ஆண்டு வெளிநாடுகளில் இருந்து புதிய வரவாக லில்லியம் மலர்கள் கொடைக்கானலுக்கு கொண்டு வரப்பட்டு, பசுமைக்குடிலில் சுற்றுலா பயணிகளின் விழிகளுக்கு விருந்து படைக்கிறது.

திருவள்ளுவர் உருவம்

கோடை விழாவையொட்டி காய்கறி, மலர்களால் உருவாக்கப்பட்ட பல்வேறு உருவங்கள் சுற்றுலா பயணிகளை கவருவதாக உள்ளது. வெள்ளை, சிவப்பு, மஞ்சள், இளஞ்சிவப்பு ஆகிய நிறங்களை கொண்ட 28 ஆயிரம் காரனேசன் மலர்களால் பல்வேறு உருவங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

குறிப்பாக மலர்களால் உருவான திருவள்ளுவர் சிலை தத்ரூபமாக இருந்தது. இது சுற்றுலா பயணிகளை திரும்பி பார்க்க வைத்தது. இதேபோல் மயில், டைனோசர், ஸ்பைடர்மேன், சிங்சாங், வெள்ளைப்பூண்டு ஆகிய உருவங்கள் மலர்களால் உருவாக்கப்பட்டிருந்தன. இதேபோல் காய்கறிகளால் உருவாக்கப்பட்ட சிங்கம், மரங்கொத்தி பறவை, தமிழன்னை உள்ளிட்ட உருவங்களும் சுற்றுலா பயணிகளை வியக்க வைத்தன. அந்த உருவங்களின் முன்பு நின்றபடி சுற்றுலா பயணிகள் 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர்.

ஓவிய கண்காட்சி

கோடைவிழாவில் வனத்துறை, தோட்டக்கலை ஆராய்ச்சி கல்லூரி, கால்நடை பராமரிப்புத்துறை, சுற்றுலாத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறை ஆகியவை சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இது சுற்றுலா பயணிகளை மகிழ்வித்தது.

இதேபோல் கொடைக்கானல் ஏரிச்சாலையில் கண்களை கொள்ளை கொள்ளும் வகையில் ஓவிய கண்காட்சி நடந்தது. கொடைக்கானலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கிய கோடைவிழாவால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.

கொடைக்கானல் ஏரிச்சாலையில் வழக்கத்தை விட அதிகமாக சுற்றுலா பயணிகள் குதிரை மற்றும் சைக்கிள் சவாரி செய்து மகிழ்ந்தனர். நட்சத்திர ஏரியில் ஆனந்தமாய் சுற்றுலா பயணிகள் படகுசவாரி செய்தனர்.

விழாவை வரவேற்ற மழை

இதற்கிடையே கோடைவிழாவை வரவேற்கும் விதமாக கொடைக்கானலில் நேற்று பலத்த மழை பெய்தது. பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை கனமழை கொட்டித்தீர்த்தது. அதேநேரத்தில், நேற்று ஒரே நாளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சியை கண்டு களித்தனர். நேற்று தொடங்கிய மலர் கண்காட்சி வருகிற 29-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறுகிறது. இதேபோல் அடுத்த மாதம் (ஜூன்) 2-ந்தேதியுடன் கோடைவிழா நிறைவு பெறுவது குறிப்பிடத்தக்கது.


Next Story