அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இதுவரை 21 ஆயிரம் டன் கரும்பு அரவை


அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இதுவரை    21 ஆயிரம் டன் கரும்பு அரவை
x

21 ஆயிரம் டன் கரும்பு அரவை

திருப்பூர்

உடுமலை

உடுமலையை அடுத்துள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இந்த ஆண்டு இதுவரை 21 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டுள்ளது.

சர்க்கரை ஆலை

உடுமலையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 6 மாத காலத்தை கரும்பு அரவை பருவமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு சர்க்கரை ஆலையும், ஆலை அரவைக்குத்தேவையான கரும்பை, கொள்முதல் செய்துகொள்வதற்காக அரசால் எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

அதன்படி இந்த ஆலைக்கு வரையறுக்கப்பட்டுள்ள எல்லைப்பகுதிகளுக்குட்பட்ட உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், பல்லடம், பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய தாலுகா பகுதிகளில் உள்ள ஆலை அங்கத்தினர்களான கரும்பு விவசாயிகளிடமிருந்து ஒப்பந்த அடிப்படையில் கரும்பு பதிவு செய்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

21 ஆயிரம் டன்

இதற்காக ஆலைப்பகுதி, குமரலிங்கம், கணியூர், நெய்காரப்பட்டி, பழனி ஆகிய 5 இடங்களில் கோட்ட கரும்பு அலுவலகங்கள் உள்ளன.

அதன்படி நடப்பு ஆண்டான 2021-2022 அரவைப்பருவத்திற்கு 2010 ஏக்கர் கன்னி கரும்பும், 1000 ஏக்கர் கட்டை கரும்பும் என மொத்தம் 3,010 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு ஆலை அரவைக்கு 1 லட்சத்து 8 ஆயிரம் டன் கரும்பு கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 2021-2022-ம் ஆண்டு அரவைப்பருவத்திற்கான கரும்பு அரவை கடந்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி தொடங்கியது.

இந்த ஆலையில், ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள கரும்பு மட்டுமல்லாது நேஷனல் கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் இருந்து வரக்கூடிய சிறிதளவு கரும்பும் அரவை செய்யப்பட்டு வருகிறது. இதன்படி இந்த ஆலையில் நேற்று காலை 6 மணி வரை 21 ஆயிரத்து 130 டன் கரும்பு அரவை செய்யப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story