போதையால் பாதை மாறும் மாணவர்கள்


போதையால் பாதை மாறும் மாணவர்கள்
x

போதையால் பாதை மாறும் மாணவர்களை நல்வழிப்படுத்துவது எப்படி? இதுபற்றி சமூக நலன்களில் அக்கறை உள்ளவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

நாமக்கல்

குடிப்பவர்கள் எப்போதும் இருந்திருக்கிறார்கள். இருந்தாலும் அவர்களும், அச்செயல்களும் ஒரு காலத்தில் அவமானமாகப் பார்க்கப்பட்டன.

இப்போது அது ஒரு கவுரவமாக மாறிவருகிறது என்பதை வெட்கப்படாமல் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். அதிலும் இளைய தலைமுறைகள் அதில் சிக்கி தள்ளாடுவதை நினைக்கிற போது வெட்கப்பட்டே தீரவேண்டும்.

விதிகளால் என்ன பயன்?

கல்வி நிறுவனங்கள் அமைந்து இருக்கும் இடங்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் பீடி, சிகரெட் போன்ற புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்ற அரசின் உத்தரவு இருக்கிறது.

21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும் என்பது அரசின் விதியாக இருக்கிறது.

விதிகளும், உத்தரவுகளும் இருந்து என்ன பயன்? தொட்டுவிடும் தூரங்களில் கெட்டுப்போகும் சூழல்கள் கொட்டிக்கிடக்கிறபோது, அது இளைஞர்களை எளிதில் பற்றிக்கொள்கிறது.

புத்தகங்கள் இருக்க வேண்டிய பைகளில் மதுபாட்டில்களையும், பேனாக்கள் பிடிக்க வேண்டிய கைகளில் சிகரெட்டுகளையும் பார்க்கிறபோது மனம் பதைபதைக்கிறது.

வகுப்பறைகளிலும், கழிப்பறைகளிலும் மாணவ, மாணவிகள் குடித்துவிட்டு கூத்தடிப்பதும், அதை வலைத்தளங்களில் பரப்பிவிட்டு மகிழ்ச்சியில் திளைத்திருப்பதும் என்ன பண்போ? தெரியவில்லை.

முன்பு எல்லாம் ஆசிரியர் அடித்தார் என்று பெற்றோர்களிடம் வந்து புகார் சொன்னால், ''நீ என்ன தவறு செய்தாய்?'' என்று கேட்பார்கள்.

இப்போது வந்து சொன்னால், ''அவர் எப்படி என் பிள்ளையை அடிக்கலாம்?'' என்று பதிலுக்கு கேட்பார்கள்.

இந்த மாற்றம்தான் இளைய சமூகத்தை இதுபோன்ற இழிநிலைக்கு இழுத்துப்போகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

தவறுக்கு ஆசிரியரிடம் அடிவாங்காத மாணவர்கள் பின்னாட்களில் சமூகக் குற்றங்கள் செய்து போலீசாரிடம் அடிவாங்கும் நிலைமைக்கு தள்ளப்படுகிறார்கள்.

போதைப்பொருட்கள்

'போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' என்ற பிரசார இயக்கத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிவைத்தார். போதைப் பொருட்கள் ஒழிப்பு வேட்டையில் தனிப்படை போலீசார் களம் இறக்கப்பட்டு இருக்கிறார்கள். தேடுதல் வேட்டையில் போதைப் பொருட்கள் கடத்தல், விற்பனை கும்பலைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

இருந்தாலும் கஞ்சா, குட்கா புகையிலை பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை என்பதே நிதர்சன உண்மை.

சென்னை மாநகரில் நடைபெறும் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்களில் பிடிபடும் குற்றவாளிகளில் 18 வயதுக்கு குறைந்தவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியூட்டும் தகவலாக இருக்கிறது.

போதைப் பழக்கத்தால் தவறான பாதைக்கு செல்லும் மாணவர்களையும், சமூக விரோதச் செயல்களால் தடம் மாறிப்போகும் இளைய சமூகத்தையும் நல்வழிப்படுத்த வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இதுபற்றி சமூக நலன்களில் அக்கறை உள்ளவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

மனநல ஆலோசகர் சங்கமித்ரை:-

சமுதாயத்தில் ஒரு குழந்தை நல்ல முறையில் வளர வேண்டும் என்பது முதலில் பெற்றோர் கையில்தான் இருக்கிறது. குழந்தைகள் வளரும் போது அறியாமல் செய்யும் தவறுகளை, ஏன் இப்படி செய்தாய்? என்று கண்டிக்க கூடாது. இனிமேல் இப்படி செய்யக்கூடாது என்று அறிவுரை வழங்கிப் புரிய வைக்க வேண்டும்.

கொரோனா காலக்கட்டத்தில் ஆன்லைன் கல்வி அமலில் இருந்ததால் செல்போன் பற்றிய புரிதல் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. எனவே செல்போனில் நல்ல விஷயங்கள் எது? கெட்ட விஷயங்கள் எது? என்பதை சொல்லிப் புரிய வைக்க வேண்டும்.

பள்ளியில் வகுப்புகள் நடத்தும்போது மாணவர்கள் மத்தியில் நல்லொழுக்க பழக்கங்கள் குறித்து ஆசிரியர்கள் அவ்வப்போது எடுத்துரைக்க வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் தவறான பாதையில் செல்வதை தடுக்க முடியும்.

ஆதார் கார்டு

சென்னை ஐகோர்ட்டு வக்கீல் ராமலிங்கம்:-

தமிழகத்தில் போதைப்பழக்கம் மாணவ-மாணவிகள் மத்தியில் அதிகரித்து வருகிறது என்பதை பொறுத்தமட்டில் தமிழனாக ஒவ்வொருவரும் வெட்கப்பட வேண்டிய விஷயம். அரசு, ஆசிரியர், பெற்றோர், சமூகம் என அனைத்துத் தரப்பும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். ஒவ்வொரு நிலையிலும் இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் பள்ளி மாணவர்களுக்கு சர்வ சாதாரணமாக கிடைக்கின்றன. யாருமே கண்டுபிடிக்க முடியாதபடி சாக்லெட் போன்ற வடிவில் போதைப்பொருட்கள் கிடைக்கின்றன. இதனை மாணவர்கள் சர்வ சாதாரணமாக பகிர்ந்து கொள்கின்றனர். போதைப்பொருளை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுத்து வருவதாக அரசு சொல்லி வருகின்ற அதே வேளையில் எப்படி போதை பொருட்கள் மாணவர்களுக்கு சர்வ சாதாரணமாக கிடைக்கிறது என்பதை பார்க்க வேண்டியது உள்ளது. டாஸ்மாக் கடைகளில் யார் வேண்டுமானாலும் மது வாங்கிக்கொள்ளலாம் என்ற நிலையை மாற்ற வேண்டும். டாஸ்மாக் கடைகளில் 21 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்களுக்கு மதுபானம் வழங்கப்படாது, ஆதார் அட்டைக்கு குறிப்பிட்ட அளவில் மட்டுமே மதுபானம் வழங்குவது, டாஸ்மாக் செயல்படும் நேரத்தை குறைப்பது போன்ற கடுமையான விதிகளை தமிழக அரசு கொண்டு வரவேண்டும்.

12 வயதில் போதைப்பொருட்கள்

நாமக்கல்லை சேர்ந்த மனநல மருத்துவர் ஜெயந்தி கூறியதாவது:-

இன்றைய இளைஞர்கள் குறிப்பாக மாணவ, மாணவிகள் நாளைய சமுதாயத்தில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் ஆவார்கள். அவர்கள் சாதிக்க பிறந்தவர்கள் என்பதை நாம் உணர்த்த வேண்டும். மாறாக போதைப்பொருட்கள் பழக்கத்தில் சிக்கி பாதை தவறி பயணிக்க நாம் அனுமதிக்க கூடாது. சுகாதாரத்துறையின் ஆய்வுபடி சராசரியாக 12 வயதில் போதைப்பொருட்களை பயன்படுத்துகின்றனர். இவர்களை நல்வழிபடுத்துவது சமுதாயத்தின் கூட்டு முயற்சி என உணர்ந்து பெற்றோர், ஆசிரியர்கள், மனநல மருத்துவர்கள் உள்ளிட்டோர் குழுவாக பணிபுரிய வேண்டும்.

பொதுவாக இப்பழக்கத்திற்கு உட்பட்ட மாணவர்களை கடிந்து கொள்வது அல்லது அவர்கள் ஒழுக்கமற்றவர்கள் என முத்திரையிடுவது சரியான வழிமுறை இல்லை என்பதை நாம் முதலில் உணர வேண்டும். அவர்களை அழைத்து அதற்கான காரணத்தை கண்டறிந்து தகுந்த மருத்துவ ஆலோசனை மற்றும் வழிமுறைகளை வழங்கும்போது, அவர்களை நல்வழிப்படுத்த முடியும்.

குறும்படம்

இப்பழக்கம் உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் அவர்களுக்கு பிரச்சினை ஏற்படுத்தும் என்பதை புரிய வைக்க வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு போதைப் பொருட்களை பயன்படுத்துபவர்களை கண்டறிவது எப்படி?, அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள்? என மனநல மருத்துவர்கள் மூலம் பயிற்சி அளிக்கலாம். மற்றவர்களிடம் இருந்து மாறுபட்டு செயல்படுவது, ஆக்ரோஷமாக நடந்து கொள்வது, யாரிடமும் சரிவர பழகாமல் இருப்பது, படிப்பு மற்றும் விளையாட்டில் ஆர்வம் குறைவது, பதற்றத்துடன் இருப்பது போன்றவர்களை கண்டறிந்து மருத்துவரிடம் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யலாம். ஆரம்பத்தில் நாம் கண்டறிந்து, சிகிச்சைக்கு உட்படுத்தினால் நல்ல பலன் உண்டு.

பள்ளி கூடங்களில் போதைப்பொருட்களினால் ஏற்படும் பின் விளைவுகளை குறும்படமாக அவர்களுக்கு காண்பிக்கலாம். மேலும் அதில் போதைப்பொருட்களுக்கு மாறாக நல்வழிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதை பற்றியும் எடுத்துரைக்கலாம். மேலும் போதைப்பொருட்களை தவிர நல்வழியில் இன்பம் தரக்கூடிய செயல்கள் எண்ணற்ற உள்ளன என்பதை அவர்களுக்கு எடுத்து கூற வேண்டும். பெற்றோர்களும், நண்பர்களை போன்று பழகி அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

முன்னேற்ற பாதையில்..

திருச்செங்கோட்டை சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியர் சங்கர் கணேஷ்:-

ஏழை-எளிய பெற்றோர்கள் நம் பிள்ளை நம்மை போன்று கஷ்டப்பட கூடாது. நன்கு படித்து சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்று கனவு காண்கிறார்கள். இதை மாணவர்கள் உணர்ந்து நல்லொழுக்கங்களை கடைபிடித்து வாழ்வில் முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டும்.

மாணவர்கள் உடற்பயிற்சியில் ஈடுபடுவது, தங்களுக்கு பிடித்தமான காரியங்களில் நேரத்தை செலவிடுவது, விளையாட்டில் ஈடுபடுவது, புத்தகம் வாசிப்பது போன்றவை அவர்களை போதைப்பொருட்களுக்கு அடிமையாவதில் இருந்து காக்கும். மேலும் நண்பர்கள் எதையாவது சொன்னால் அது சரியா, தவறா என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

வெட்கப்பட வேண்டியது

மோகனூரை சேர்ந்த வக்கீல் தங்கமுத்து:-

தமிழகத்தில் கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் பள்ளி மாணவர்களுக்கு சர்வ சாதாரணமாக கிடைக்கின்றன. போதைப்பழக்கம் மாணவ-மாணவிகள் மத்தியில் அதிகரித்து வருவது வெட்கப்பட வேண்டிய விஷயம். அரசு, ஆசிரியர், பெற்றோர், சமூகம் என அனைத்து தரப்பும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். அனைத்து நிலைகளிலும் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Next Story