போதையால் பாதை மாறும் மாணவர்கள்; நல்வழிப்படுத்துவது எப்படி?


போதையால் பாதை மாறும் மாணவர்கள்; நல்வழிப்படுத்துவது எப்படி?
x

போதையால் பாதை மாறும் மாணவர்களை நல்வழிப்படுத்துவது எப்படி? என்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தேனி

குடிப்பவர்கள் எப்போதும் இருந்திருக்கிறார்கள். இருந்தாலும் அவர்களும், அச்செயல்களும் ஒரு காலத்தில் அவமானமாகப் பார்க்கப்பட்டன.

இப்போது அது ஒரு கவுரவமாக மாறிவருகிறது என்பதை வெட்கப்படாமல் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். அதிலும் இளைய தலைமுறைகள் அதில் சிக்கி தள்ளாடுவதை நினைக்கிற போது வெட்கப்பட்டே தீரவேண்டும்.

விதிகளால் என்ன பயன்?

கல்வி நிறுவனங்கள் அமைந்து இருக்கும் இடங்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் பீடி, சிகரெட் போன்ற புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்ற அரசின் உத்தரவு இருக்கிறது.

21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும் என்பது அரசின் விதியாக இருக்கிறது.

விதிகளும், உத்தரவுகளும் இருந்து என்ன பயன்? தொட்டுவிடும் தூரங்களில் கெட்டுப்போகும் சூழல்கள் கொட்டிக்கிடக்கிறபோது, அது இளைஞர்களை எளிதில் பற்றிக்கொள்கிறது.

புத்தகங்கள் இருக்க வேண்டிய பைகளில் மதுப்பாட்டில்களையும், பேனாக்கள் பிடிக்க வேண்டிய கைகளில் சிகரெட்டுகளையும் பார்க்கிறபோது மனம் பதைபதைக்கிறது.

வகுப்பறைகளிலும், கழிப்பறைகளிலும் மாணவ, மாணவிகள் குடித்துவிட்டு கூத்தடிப்பதும், அதை வலைத்தளங்களில் பரப்பிவிட்டு மகிழ்ச்சியில் திளைத்திருப்பதும் என்ன பண்போ? தெரியவில்லை.

முன்பு எல்லாம் ஆசிரியர் அடித்தார் என்று பெற்றோர்களிடம் வந்து புகார் சொன்னால், ''நீ என்ன தவறு செய்தாய்?'' என்று கேட்பார்கள்.

இப்போது வந்து சொன்னால், ''அவர் எப்படி என் பிள்ளையை அடிக்கலாம்?'' என்று பதிலுக்கு கேட்பார்கள்.

இந்த மாற்றம்தான் இளைய சமூகத்தை இதுபோன்ற இழிநிலைக்கு இழுத்துப்போகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

தவறுக்கு ஆசிரியரிடம் அடிவாங்காத மாணவர்கள் பின் நாட்களில் சமூகக் குற்றங்கள் செய்து போலீசாரிடம் அடிவாங்கும் நிலைமைக்கு தள்ளப்படுகிறார்கள்.

போதைப்பொருட்கள்

'போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' என்ற பிரசார இயக்கத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிவைத்தார். போதைப் பொருட்கள் ஒழிப்பு வேட்டையில் தனிப்படை போலீசார் களம் இறக்கப்பட்டு இருக்கிறார்கள். தேடுதல் வேட்டையில் போதைப் பொருட்கள் கடத்தல், விற்பனை கும்பலைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

இருந்தாலும் கஞ்சா, குட்கா புகையிலை பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை என்பதே நிதர்சன உண்மை.

சென்னை மாநகரில் நடைபெறும் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்களில் பிடிபடும் குற்றவாளிகளில் 18 வயதுக்கு குறைந்தவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியூட்டும் தகவலாக இருக்கிறது.

போதைப் பழக்கத்தால் தவறான பாதைக்கு செல்லும் மாணவர்களையும், சமூக விரோதச் செயல்களால் தடம் மாறிப்போகும் இளைய சமூகத்தையும் நல்வழிப்படுத்த வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

தேனி மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்களை ஒழிக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இருந்த போதிலும் அவற்றின் விற்பனை அதிக அளவில் இருக்கின்றன. குறிப்பாக மாணவர்களை மையப்படுத்தி புகையிலை பொருட்கள் விற்பனை அதிக அளவில் நடக்கிறது. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், பள்ளி வளாகத்திலும் புகையிலைப் பொருட்களை பயன்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இதுபற்றி சமூக நலன்களில் அக்கறை உள்ளவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

மகிழ்ச்சியை தேடி போதை பழக்கம்

ராஜசேகரன் (ஆசிரியர், தேனி):- மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருக்க பள்ளி அளவில் தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருந்தாலும் பள்ளிக்கு வெளியே ஏற்படும் தீய நட்பு மாணவர்களை போதைப் பழக்கத்திற்கு இழுத்துச் செல்ல காரணமாக இருந்து வருகிறது. பள்ளி இடைநின்ற மாணவர்கள், கல்லூரி படிப்பை தொடராத நபர்கள் சிலர் போதை பழக்கத்துக்கு அடிமையாகின்றனர். அதுபோன்ற நபர்களோடு மாணவர்கள் தொடர்பில் இருக்கும் போது விளையாட்டு தனமாகவும், ஒருவித மகிழ்ச்சியை தேடியும் போதை பழக்கத்துக்கு அடிமையாகின்றனர். புகையிலை, கஞ்சா போன்றவை மாணவர்கள் எட்டும் தூரத்தில் அவர்களுக்கு கிடைத்து விடுகிறது. போலீஸ் துறையினர் பல நடவடிக்கை எடுத்தாலும் போதை பொருட்கள் விற்பவர்கள் பலரும் தொடர்ந்து அதே தீயசெயலில் ஈடுபடுவது மாணவர்களின் நலனையும், சமூக நலனையும் பாதிக்கிறது.

சுருளிவேல் (போடி):- பள்ளிக்கு அருகில் உள்ள கடைகளிலும் போதைப்பொருட்கள், புகையிலைப் பொருட்கள் விற்பனை நடக்கிறது. அதை முற்றிலும் தடுக்க வேண்டும். கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் தொடர் நடவடிக்கை எடுத்ததால் அவற்றின் விற்பனை குறைந்தது. மீண்டும் அதே வேகத்தை தடுப்பு நடவடிக்கையில் காட்ட வேண்டும். கஞ்சா வியாபாரிகளை கைது செய்து அவர்களின் சொத்துகளை முடக்கியது போன்று, புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து அவர்களின் கடைகளுக்கு சீல் வைக்கவும், சொத்துகளை முடக்கவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

தவறான நட்பு

சரவணன் (மனநல ஆலோசகர், கம்பம்):- பள்ளிப் பருவத்தில் இருந்தே போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கிடைக்கும் பொருட்களை எல்லாம் போதைக்கு எப்படி பயன்படுத்துவது என்ற மனநிலைக்கு சிலர் தள்ளப்படுவதும், அதை முயற்சித்து பார்ப்பதும் அதிகரிக்கிறது. பெரும்பாலும் தாய் அல்லது தந்தை இல்லாத சூழலில் வளரும் குழந்தைகள் தான் போதைப் பழக்கத்துக்கு எளிதில் அடிமையாகின்றனர். அதனால், குழந்தைகளின் செயல்களை கண்காணிக்க வேண்டிய தேவை பெற்றோருக்கு உள்ளது. பள்ளியில் தங்களை ஹீரோக்கள் போன்று காட்டிக்கொள்ளும் மாணவன் யாராவது ஒருவர் இருப்பார். அவரை கண்காணித்தாலே, அவரும் கெட்டுப் போகாமல், மற்றவர்களையும் கெடுத்துவிடாமல் தடுக்கலாம். மாணவர்களுக்கு கல்வி மற்றும் விளையாட்டில் நாட்டம் ஏற்படுத்த அடிக்கடி போட்டிகள் நடத்த வேண்டும். அவர்களின் நேரத்தை பயனுள்ள வகையில் செலவிட செய்ய வேண்டும். தனிமையும், தவறான நட்பும் அவர்களை போதைக்கு அடிமையாக்கிவிடுகிறது.

கண்டுபிடிப்பது எப்படி?

டாக்டர் ராஜேஷ் (மாவட்ட மன நல மருத்துவர்):- 40 வயதுக்கு மேல் ஒருவர் போதைக்கு அடிமையாக இருக்கிறார் என்றால் பெரும்பாலும் அவர் மதுவுக்கு அடிமையாகிறார். ஆனால் 15 முதல் 25 வயது வரை உள்ளவர்கள் பெரும்பாலும் கஞ்சாவுக்கு அடிமை ஆகின்றனர். அது எளிதில் கிடைப்பதாலும், குறைந்த விலையில் கிடைப்பதாலும் இளைஞர்கள் அதன் மீது நாட்டம் கொள்கின்றனர். மேலும் கஞ்சா பயன்படுத்துவது அவர்களை வீட்டில் எளிதில் கண்டுபிடிக்க முடியாது என்பதால் மதுவை விடவும் கஞ்சா பழக்கத்துக்கு அடிமை ஆவது இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

முதலில் சிறிய அளவிலான புகையிலைப் பொருட்களில் தொடங்கி பின்னர், சிகரெட், குட்கா என்று பயன்படுத்தி பின்னர் கஞ்சாவுக்கு அடிமையாகின்றனர். இதை எப்படி கண்டுபிடிக்க முடியும் என்றால், நன்கு படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் திடீரென கல்வியில் பின்தங்குவார்கள். இரவில் தூக்கமின்மை, கோபம், எரிச்சல், குறுகிய நட்பு வட்டம், உறவினர்களோடு பேச மறுத்து விலகி இருப்பது, வித்தியாசமான ஆடைகள், அணிகலன்களை அணிய விரும்புவது, வெளியே சென்று திரும்பும் போது அதிகம் சாப்பிடுவது போன்றவை மூலம் ஏதோ ஒரு போதை பழக்கத்துக்கு அவர்கள் அடிமையாகி கொண்டிருப்பதை அறிய முடியும். பணம் கேட்டவுடன் கொடுத்தால் மகிழ்ச்சி அடைவதும், கொடுக்காவிட்டால் கோபம் அடைவதும் கூட ஒரு அறிகுறிதான். அதே நிலை நீடித்தால் அடுத்த கட்டமாக மனநலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை மற்றும் உரிய ஆலோசனைகள் வழங்குவதன் மூலம் அவர்களை போதை பழக்கத்திலிருந்து மீட்டெடுக்க ஏதுவாக அமையும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story