தமிழ் கனவு நிகழ்ச்சி:தமிழ் மரபை மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் பேச்சு
தமிழ் மரபை மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்று தமிழ் கனவு நிகழ்ச்சியில் கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கூறினார்.
நாகர்கோவில்:
தமிழ் மரபை மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்று தமிழ் கனவு நிகழ்ச்சியில் கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கூறினார்.
தமிழ் கனவு நிகழ்ச்சி
குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழ் கனவு நிகழ்ச்சி நாகர்கோவில் புனித சிலுவை பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கலந்துகொண்டு கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த புத்தக கண்காட்சி, நான் முதல்வன் திட்டம், வேலை வாய்ப்பு அலுவலகம், உயர்கல்வி வழிகாட்டுதல், வங்கி கடன், மாவட்ட தொழில் மையம் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்ட துறையை சார்ந்த அரங்குகளை பார்வையிட்டார்.
பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-
தமிழ் பண்பாடு என்பது தனித்துவமானதோடு, மிகவும் மகத்துவமானது. மாணவர் அனைவரும் தமிழ் பண்பாடு குறித்து நடைபெறும் கருத்தரங்குகளில் கலந்து கொண்டு, தமிழ்மொழி குறித்த வரலாற்று புத்தகங்களை படித்தும், இணையவழியாக தமிழ் மரபுகள் குறித்த தகவல்களையும் தெரிந்து கொள்ள முன்வர வேண்டும்.
பண்பாடு
தமிழ் மரபு மற்றும் பண்பாட்டினையும், தமிழின் செழுமை குறித்தும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். முக்கியமாக தமிழர்களின் பாரம்பரிய கலை வடிவங்கள், இலக்கியம், அன்றைய காலக்கட்டங்களில் வழங்கப்பட்ட கல்வி முறைகள் போன்ற கூறுகளை ஒவ்வொரு மாணவர்களும் அறிந்து கொண்டு அடுத்த தலைமுறையினர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே தமிழ் கனவு நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.
நமது மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும், சமூக சமத்துவத்தையும் பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும் இளம் தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் நோக்கில் மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களும் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கேள்விகளுக்கு பதில்
அதைத் தொடர்ந்து மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன், ஊடகவியலாளர் குணசேகரன் ஆகியோர் மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்கள். மேலும் பெருமித செல்வன், பெருமித செல்வி மற்றும் கேள்வியின் நாயகன் மற்றும் கேள்வியின் நாயகி ஆகிய விருதுகளை கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, ஹோலி கிராஸ் கல்லூரி அருட்சகோதரி சகாய செல்வி, கல்லூரி செயலாளர் மேரி கில்டா, மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜினி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி, அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ராஜேஷ், கோணம் அரசு கல்லூரி தமிழ் துறை பேராசிரியர்கள் அமுதன், ஜோதி ரவீந்திரன், ஹோலி கிராஸ் தமிழ்த்துறை உதவி பேராசிரியர் தேன்மொழி உள்பட பலர் கலந்துகொண்டனர்.