பள்ளிக்கு முககவசம் அணிந்து வந்த மாணவ-மாணவிகள்
கொரோனா பரவல் எதிரொலியாக மாணவ-மாணவிகள் முககவசம் அணிந்து பள்ளிக்கு வந்தனர்.
கொரோனா பரவல்
உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்திய கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஓராண்டாக குறைந்தது. இதனால் முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல் ஆகிய பழக்கங்களும் குறைந்தன. அதிலும் பெரும்பாலான மக்கள் முககவசம் அணியாமல் மக்கள் கூட்டம் மிகுந்த பொது இடங்களில் சர்வ சாதாரணமாக சுற்றுகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் தடுப்பூசி செலுத்துதல், முககவசம் அணிதல் ஆகிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்கும்படி மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி உள்ளன.
முககவசம் கட்டாயம்
இதற்கிடையே தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் கட்டாயம் முககவசம் அணிந்து வரவேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலம் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மீண்டும் முககவசம் அணிந்து பள்ளிக்கு வந்தனர்.
மேலும் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தனர். அதோடு வகுப்பறைகளில் மாணவ-மாணவிகள் இடைவெளி விட்டு அமர வைக்கப்பட்டனர். அதேபோல் பொதுமக்களும் வெளியே வரும்போது அவசியம் முககவசம் அணிய வேண்டும். அதன்மூலம் கொரோனா பரவலை தடுக்கலாம் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.