ரெயில்முன் பாய்ந்து பிளஸ்-2 மாணவி தற்கொலை
ராமநாதபுரத்தில் பிளஸ்-2 மாணவி ரெயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
ராமநாதபுரத்தில் பிளஸ்-2 மாணவி ரெயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
மாணவி மாயம்
ராமநாதபுரம் சாலைத்தெரு பகுதியை சேர்ந்தவர் ராபர்ட் ஜெயக்குமார். இவர் மேதலோடை உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகள் பெலிசியா மேக்டலின்(வயது 17). தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் தினமும் பள்ளிக்கு பஸ்சில் சென்று வந்தார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வழக்கம் போல பள்ளி பஸ்சில் வந்து ரோமன் சர்ச் பகுதியில் இறங்கினார். ஆனால், அவர் வீட்டுக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது.
இதனால் மகளை காணாமல் அவரின் பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் ராமநாதபுரம் பஜார் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடிவந்தனர்.
தற்கொலை
இந்நிலையில் நேற்று காலை ராமநாதபுரம் ஆதம்நகர் பின்பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் ரெயிலில் அடிபட்டு இளம்பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசாரும், ரெயில்வே போலீசாரும் அங்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பள்ளி சீருடை மற்றும் ஷூ ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது இறந்தது பெலிசியா மேக்டலினாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.
அவரின் பெற்றோரை வரவழைத்து காட்டியபோது இறந்தது தங்கள் மகள்தான் என உறுதி செய்தனர். மேலும் மகளின் உடல் துண்டு துண்டாக இருப்பதை கண்டு கதறி அழுதனர்.
அந்த வழியாக நேற்று காலை வரை 9 ரெயில்கள் வரை சென்றதால் மாணவியின் உடல் நசுங்கி பல துண்டுகளாக சிதறி கிடந்தது. அவற்றை போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் மாணவி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என பல்வேறு கோணங்களில் ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.