'மாணவர் மனசு பெட்டி' நோக்கம் நிறைவேறுகிறதா?


மாணவர் மனசு பெட்டி நோக்கம் நிறைவேறுகிறதா?
x

நாமக்கல் மாவட்டத்தில் 1,012 அரசு பள்ளிகளில் ‘மாணவர் மனசு பெட்டி’ அமைக்கப்பட்டதற்கான நோக்கம் நிறைவேறுகிறதா? என்பது குறித்து தலைமை ஆசிரியர்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்து உள்ளனர்.

நாமக்கல்

மாணவர் மனசு பெட்டி

கடந்த 2019-ம் ஆண்டு பெண் குழந்தை பாலியல் துன்புறுத்தல் வழக்கு ஒன்றில், தீர்ப்பு வழங்கிய மகிளா கோர்ட்டு நீதிபதி சில கருத்துகளை முன்வைத்தார். அதில் பாலியல் குற்றங்கள் தொடர்பாக பள்ளிக்கூடங்களில் மாணவ-மாணவிகள் தங்கள் புகார்களை தெரிவிக்க புகார் பெட்டி வைக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

அதனை செயல்படுத்தும் விதமாகவும் பள்ளி மாணவிகளுக்கு நிகழும் பாலியல் தொந்தரவுகளை தடுக்கும் விதமாகவும் பள்ளிக் கல்வித்துறை கொண்டு வந்ததுதான் 'மாணவர் மனசு பெட்டி'. அதுமட்டுமல்ல, பள்ளிகளில் உள்ள நிறைகுறைகள், கல்விப்பாதையில் மாணவ-மாணவிகளின் மனதில் உள்ள எண்ணங்கள், தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் ஏதுவாக இது ஏற்படுத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் உள்ள 31 ஆயிரத்து 214 அரசு இடைநிலைப்பள்ளிகள், 6 ஆயிரத்து 177 மேல்நிலைப்பள்ளிகளில் இந்த பெட்டியை வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ.1,000 நிதியையும் கல்வித்துறை ஒதுக்கியது.

உடனுக்குடன் தீர்வு

அதன்படி, அனைத்து பள்ளிகளிலும் இந்த 'மாணவர் மனசு பெட்டி' தலைமை ஆசிரியர் அறைக்கு முன்பாக வைக்கப்பட்டு இருக்கிறது. இதில் புகார் தெரிவிக்கும் மாணவ-மாணவிகளின் புகார்களை கண்காணிக்க தலைமை ஆசிரியர் தலைமையில், 2 ஆசிரியர்கள், ஒரு பெற்றோர், பெற்றோர்-ஆசிரியர் கழக உறுப்பினர், ஆசிரியர் அல்லாத பணியாளர், நிர்வாக பணியாளர், வெளி உறுப்பினர் கொண்ட பாதுகாப்பு ஆலோசனைக்குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த குழு 'மாணவர் மனசு பெட்டி'யில் விழும் புகார்களை 15 நாட்களுக்கு ஒரு முறையோ அல்லது வாரத்துக்கு ஒரு முறையோ பிரித்து பார்த்து, அதில் மாணவ-மாணவிகள் தெரிவித்து இருப்பதை பள்ளி அளவில் நிவர்த்தி செய்ய முடிந்ததை உடனுக்குடன் தீர்வு காணுகின்றனர்.

என்ன மாதிரியான புகார்கள்?

பெரும்பாலும் பள்ளி அளவில் நிவர்த்தி செய்யப்படக்கூடிய புகார்களைதான் மாணவ-மாணவிகள் அதிகம் தெரிவிப்பதாகவும், அதனை ஓரிரு நாட்களில் சரிசெய்து விடுவதாகவும் பள்ளி நிர்வாகம் தெரிவிக்கிறது. அந்தவகையில், ஆசிரியர்கள் வீட்டு பாடம் அதிக அளவில் கொடுக்கிறார்கள். அதை குறைத்து கொடுக்க சொல்லுங்கள். வகுப்பறையில் மின் விசிறி சரியாக சுழலுவதில்லை. உடற்கல்வி பாடவேளையில் வேறு வகுப்பு ஆசிரியர் பாடம் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்பது போன்ற வகுப்பறை சார்ந்த புகார்கள் தான் பெருமளவில் இடம்பெறுகின்றன.

இதுதவிர வகுப்பறையில் சில மாணவ-மாணவிகள் செல்போன் பயன்படுத்துகிறார்கள், தவறான வார்த்தைகளை சிலர் பேசுகிறார்கள். ஒழுங்கீனமாக சில மாணவர்கள் நடக்கிறார்கள் என்பது போன்ற புகார்களையும், பள்ளிகளில் கழிவறை சுத்தம் செய்யப்படாமல் இருக்கிறது. கழிவறை கதவு உடைந்து உள்ளது, குடிநீர் வசதி குறைவாக இருக்கிறது, செடிக்கு தண்ணீர் ஊற்றாமல் இருக்கிறது என்பது போன்ற பொதுநல புகார்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

'சானிட்டரி நாப்கின்' வையுங்கள்

மேலும் வீட்டில் சொல்ல முடியாத சிலவற்றையும் மாணவ-மாணவிகள் மனம் திறந்து பெயருடன் குறிப்பிட்டு இந்த பெட்டியில் கடிதமாக எழுதி போடுகிறார்கள். சிலர் நேரடியாக ஆசிரியர்களிடமும் தெரிவிக்கிறார்கள். அந்த மாணவர்களை அழைத்து பேசுவதோடு, சம்பந்தப்பட்டவர்களின் பெற்றோரிடம் முறைப்படி ஆசிரியர்கள் எடுத்துக் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல், கல்வி சுற்றுலா அழைத்து செல்லுங்கள், சமையல் போட்டி நடத்துங்கள், பள்ளியில் 'சானிட்டரி நாப்கின்' எந்திரம் வையுங்கள் போன்றவையும் இந்த புகார் பெட்டியில் புகார்களாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் 695 தொடக்கப்பள்ளிகள், 156 நடுநிலைப்பள்ளிகள், 67 உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 94 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 1,012 அரசு பள்ளிகளில் மாணவர் மனசு பெட்டி வைக்கப்பட்டு உள்ளன. இவை 15 நாட்களுக்கு ஒருமுறையோ அல்லது வாரம் ஒருமுறையோ திறக்கப்பட்டு, அதில் உள்ள குறைகள் தீர்க்கப்பட்டு வருவதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

எந்த நோக்கத்துக்காக 'மாணவர் மனசு பெட்டி' திட்டம் கொண்டு வரப்பட்டதோ? அது நிறைவேறி இருக்கிறதா? என்பது தொடர்பாக நாமக்கல் மாவட்ட தலைமை ஆசிரியர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

பதிவேடு பராமரிப்பு

நாமக்கல் தெற்கு அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பெரியண்ணன்:-

எங்களது பள்ளியில் வைக்கப்பட்டு உள்ள மாணவர் மனசு பெட்டியை 15 நாட்களுக்கு ஒருமுறை திறப்போம். அதில் புகார் மனுக்கள் இருந்தால், இருந்தது என்றும், இல்லை எனில் புகார் மனுக்கள் எதுவும் இல்லை என்றும் அதற்கான பதிவேட்டில் பதிவு செய்து கொள்வோம்.

மாணவர்கள் நேரடியாக சொல்ல முடியாத பிரச்சினைகளை இந்த 'மாணவர் மனசு பெட்டி'யில் போட முடிகிறது. அதன் மூலம் அதற்கு தீர்வும் காண முடிகிறது. எனவே அரசின் இந்த திட்டம் மாணவர்களுக்கு மிகவும் பயன் அளிப்பதாக உள்ளது.

அடிப்படை வசதிகள்

எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராஜ்:-

என்ன நோக்கத்திற்காக இந்த மாணவர் மனசு பெட்டி திட்டம் கொண்டு வரப்பட்டதோ? அது சரியாக நிறைவேறி இருக்கிறது. மாணவர்கள் தங்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாக இந்த பெட்டியில் கடிதம் வாயிலாக தெரிவிக்கின்றனர். அதை நாங்கள் விசாரித்து ஆய்வு செய்து சரி செய்கிறோம்.

பள்ளியில் ஏதேனும் அடிப்படை வசதிகள் தொடர்பாக கடிதம் வந்தாலும், அதையும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி மாவட்ட நிர்வாகம் மூலம் நிவர்த்தி செய்து வருகிறோம்.

தீர்வு காண்கிறோம்

மோகனூர் அருகே உள்ள எஸ்.வாழவந்தி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நல்லதம்பி:-

'மாணவர் மனசு பெட்டி' அவசியமான ஒன்று. நேரடியாக சொல்ல முடியாத பிரச்சினைகளை இதன் வாயிலாக மாணவ, மாணவிகள் தெரிவிக்கிறார்கள். பிரச்சினைக்கு ஏற்றார்போல் நாங்களும் அவர்களுக்கு அறிவுரைகள் கூறி தீர்வு காண்கிறோம்.

பள்ளியை இயல்பாக முன்எடுத்து செல்வதற்கு இந்த மாணவர் மனசு பெட்டி பெரும் உதவியாக இருக்கிறது. இந்த பெட்டியில் வரும் கடிதங்கள் மூலம் மாணவ, மாணவிகளின் எண்ணங்களை தெரிந்து கொண்டு, அதற்கு தகுந்தாற்போல் நடவடிக்கை மேற்கொள்ள முடிகிறது.

நாமக்கல் அரசு பள்ளி மாணவர் திருமுருகன்:-

அரசு பள்ளிகளில் 'மாணவர் மனசு பெட்டி' அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் துருப்பு சீட்டாக இருக்கிறது. நண்பர்களிடம், பெற்றோரிடம் சொல்ல முடியாத சில விஷயங்களை கூட இந்த பெட்டியில் கடிதம் வாயிலாக தெரிவித்து தீர்வு காணமுடிகிறது. இது மாணவ, மாணவிகளின் மனஅழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story