கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மாணவர் திடீர் சாவு: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் கள்ளக்குறிச்சியில் பரபரப்பு


கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மாணவர் திடீர் சாவு:  உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்  கள்ளக்குறிச்சியில் பரபரப்பு
x

கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் உயிரிழந்த மாணவரின் உடலை வாங்க மறுத்து கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி,

கடலூர் மாவட்டம் புவனகிரி தாலுகா மிராளூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் மகன் ஜெயசூரியா (வயது 18). பிளஸ்-2 தேர்வு எழுதியுள்ள இவர் கச்சிராயப்பாளையம் கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் 15 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் பணியில் வெல்டருக்கு உதவியாளராக பணியாற்றி வந்தார். இதற்காக ஜெயசூரியா அவருடன் வேலை பார்த்த நண்பர்கள் சர்க்கரை ஆலை வளாகத்தின் முன்பு உள்ள வாடகை குடியிருப்பில் தங்கியிருந்தார்.

இந்த நிலையில் மயங்கிய நிலையில் கிடந்த ஜெயசூரியாவை, நண்பர்கள் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே ஜெயசூரியா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் அதே ஆஸ்பத்திரியில் உள்ள பிணவறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டது.

உறவினர்கள் போராட்டம்

இந்த நிலையில் ஜெயசூர்யா இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், மர்ம நபர்கள் அவரை கொலை செய்து விட்டார்கள், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தும் வரை, ஜெயசூர்யாவின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி அவரது உறவினர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர். பின்னர் ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பிரேத பரிசோதனை அறிக்கை வருவதையடுத்து இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையேற்ற அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story