கோத்தகிரி பகுதியில் வனவிலங்குகள் பலியாவதை தடுக்க கிணறுகள், கழிவுநீர் தொட்டிகளுக்கு பலமான மூடிகள்-பொதுமக்களுக்கு, வனத்துறையினர் அறிவுறுத்தல்
கோத்தகிரி பகுதியில் வனவிலங்குகள் பலியாவதை தடுக்க கிணறுகள், கழிவுநீர் தொட்டிகளுக்கு பலமான மூடிகள்-பொதுமக்களுக்கு, வனத்துறையினர் அறிவுறுத்தல்
கோத்தகிரி
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மூடப்படாத கிணறுகள், கழிவு நீர்த் தொட்டிகளில் வனவிலங்குகள் தவறிவிழுந்து தொடர்ந்து உயிரிழந்து வருவதால், கழிவு நீர் தொட்டிகள் மற்றும் கிணறுகளுக்கு பலமான மூடி. போட்டு பாதுகாப்பாக வைக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இது குறித்து கட்டப்பெட்டு வனசரகர் செல்வகுமார் தெரிவிக்கையில் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலும் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. எனவே வனப்பகுதிகளில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் குடியிருப்புப் பகுதிக்குள் அடிக்கடி வந்து செல்கின்றன. இந்நிலையில் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொது கிணறுகள் மற்றும் தனியார் கிணறுகள் மற்றும் கழிவு நீர்த் தொட்டிகள் பல மூடப்படாமல் உள்ளதுடன், பல இடங்களில் பலமில்லாத மூடிகள் அமைக்கப்பட்டு இருப்பதால் வனவிலங்குகள் அவற்றில் தவறி விழுந்து உயிரிழந்து வருவது வாடிக்கையாகி வருகிறது. அவ்வாறு விழுந்து உயிரிழக்கும் விலங்குகளின் உடல்களை மீட்க வனத்துறையினர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே பொதுமக்கள் வன விலங்குகள் இவற்றில் விழுந்து உயிரிழப்பதை தடுக்கும் விதமாக அனைத்து கிணறுகள், தொட்டிகள் மற்றும் கழிவு நீர் தொட்டிகளுக்கு பலமான மூடி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.