இலவச பொங்கல் பொருட்களோடு அடுப்பு, மண்பானை வழங்க வேண்டும்
பொங்கல் பண்டிகைக்கு இலவச பொங்கல் பொருட்களோடு அடுப்பு, மண்பானை வழங்க வேண்டும் மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கத்தினர் மண்பானை மற்றும் அடுப்புகளை சுமந்து ஊர்வலமாக சென்று கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பொங்கல் பண்டிகையின்போது விவசாயிகள் நலன் காக்க அரிசி, பருப்பு, கரும்பு உள்ளிட்ட உணவுப்பொருட்களும், நெசவாளர்கள் நலன்காக்க சேலை, வேட்டி ஆகியவற்றை கொள்முதல் செய்யும் தமிழகஅரசு அழிந்துவரும் மண்பாண்ட தொழிலை காக்கவும், மண்பாண்ட தொழிலாளர்கள் நலன் காக்கவும், புதிய அரிசியை புதுப்பானையில் பொங்கலிட களிமண்ணால் ஆன ஒரு அடுப்பும், புது மண்பானையையும் அரசு கொள்முதல் செய்து இலவசமாக வழங்கினால் அப்பகுதியில் வாழையடி, வாழையாக வாழ்ந்து வருகின்ற மண்டபாண்ட தொழிலாளர்கள் வாழ்வில் ஒளியேற்றமுடியும். எனவே, நீண்டநாள் கோரிக்கையாக இதை நிறைவேற்றும் வகையில் உத்தரவு பிறப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அரசின் பரிந்துரைக்கு அனுப்புவதாக தெரிவித்தார்.