தலைவர்களின் சிலைகள் பராமரிக்கப்படுமா?


தலைவர்களின் சிலைகள் பராமரிக்கப்படுமா?
x

தலைவர்களின் நினைவாக சிலைகள் வைக்கிறோம். அவர்களின் சாதனைகள், பெருமைகள் வழிவரும் சந்ததிகளுக்கு தெரியவேண்டும் என்பதே அதன் நோக்கம்.

நாமக்கல்

பொறுமை இல்லை

சிலைகள் என்று சொன்னாலும் அச்சிலைகளுக்கு எவரேனும் இழுக்கு ஏற்படுத்துவார் என்றால் யாரும் பொறுத்துக் கொள்வது இல்லை.

அதைத் தலைவருக்கே ஏற்பட்ட இழுக்காகக் கருதி வெகுண்டு எழுகிறோம்.

அத்தகைய மனம்கொண்ட நாம், அந்தச் சிலைகளுக்கு இயற்கையில் ஏதேனும் குற்றம் குறை வராதவாறு பார்த்துக் கொள்கிறோமா என்றால்? இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அலங்காரம்

சிலைகளை வைப்பதுடன் சரி. பிறந்தநாள், நினைவு நாட்களில் மட்டுமே அலங்காரம் செய்கிறோம். மற்ற நாட்களில் காகங்களையும், குருவிகளையும் அலங்கோலப்படுத்த விடுகிறோம்.

தலைவர்களை கவுரவப்படுத்த வேண்டும் என்ற நமது அடிப்படை நோக்கம் இங்கே அர்த்தமற்றுப் போவதை யாரும் உணர மறுக்கிறோம்.

இதுபற்றி சமூக பார்வையாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

ஆர்.நல்லக்கண்ணு

இதுபற்றி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு கூறியதாவது:-

மக்கள் நலனுக்காக தங்கள் வாழ்க்கையை ஒப்படைத்து மறைந்த தலைவர்களுக்கு சிலைகள் அமைப்பதில் எவ்வித தவறும் இல்லை. ஆனால் சிலைகள் வைப்பதோடு தங்கள் கடமை முடிந்து விட்டது என்று யாரும் கருதக்கூடாது.

தலைவர்களின் சிலைகளை தினந்தோறும் தூய்மை செய்து பராமரிக்க வேண்டும். அப்படிச் செய்ய முடியவில்லை என்றால் அவர்களது பிறந்தநாள், நினைவுநாளின்போது சிலைகளை நன்றாகச் சுத்தம் செய்து, வர்ணம் பூசவேண்டும். மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அவர்களது கொள்கைகளை பரப்ப வேண்டும்.

இதுதான் மறைந்த தலைவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாகவும், புகழ் அஞ்சலியாகவும் இருக்கும்.

இவ்வாறு ஆர்.நல்லகண்ணு கூறினார்.

சிவாஜி கணேசன் சிலை

மறைந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசன் சிலை பராமரிப்பு குறித்து நடிகர் பிரபு கூறியதாவது:-

என்னுடைய தந்தையார் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அடையாறில் மணிமண்டபம் அமைத்து தமிழக அரசு சிறப்பான முறையில் பராமரித்து வருகிறது.

மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பிறந்தநாள், நினைவுநாட்களில் மட்டுமின்றி வாரந்தோறும் வெள்ளிக்கிழமை தோறும் தவறாமல் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதை வழக்கமாகக் கொண்டு இருக்கிறோம்.

மறைந்த தலைவர்களின் சிலைகளை தொடர்ந்து பராமரித்து அவர்களது புகழைப் போற்ற வேண்டும்.

இவ்வாறு நடிகர் பிரபு கூறினார்.

நாட்டுக்காக உழைத்த

நாமக்கல் நகர வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு குழுவின் தலைவர் ஷேக்நவீத்:-

சுதந்திர போராட்ட வீரர்களின் சிலை என்றாலும் சரி, அரசியல் கட்சித் தலைவர்கள் சிலை என்றாலும் சரி அது உரிய முறையில் பராமரிக்கப்பட வேண்டும். அந்த வகையில் தான் நாமக்கல் நகரில் உள்ள அனைத்து சிலைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக காவல்துறையினரின் அறிவுறுத்தல்படி அனைத்து சிலைகளை சுற்றிலும் இரும்பு கம்பிகளால் கூண்டு அமைக்கப்பட்டு உள்ளது.

அவ்வாறு கூண்டுக்குள் சிலைகள் இருப்பதால் சில நேரங்களில் விரிசல் இருந்தால் தெரியாமல் போய்விடும். அதை நாங்கள் சம்பந்தப்பட்ட கட்சியினருக்கு தெரிவித்து சரி செய்ய உரிய நடவடிக்கை எடுப்போம். இந்த வகையில் நாமக்கல் பிரதான சாலையில் உள்ள நேதாஜி சிலையின் அடிபாகத்தில் லேசான விரிசல் இருப்பது தெரிய வந்துள்ளது. அதை உடனடியாக சீரமைக்க எங்களது சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள் சங்கத்தின் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தலைவர்கள் சிலை முன்பு சிலர் விளம்பர தட்டிகள் வைத்து மறைத்து விடுகிறார்கள். இதை தவிர்க்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். நாட்டுக்காக உழைத்த தலைவர்களுக்கு உரிய மரியாதை செலுத்த வேண்டியது நமது கடமை.

கை முறிந்த இந்திராகாந்தி சிலை

வடுகம் முனியப்பன்பாளையத்தை சேர்ந்த சவுந்திரராஜன்:-

நாமகிரிபேட்டை வட்டாரம் மெட்டாலாவில் 34 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 14.4.1990-ம் ஆண்டு தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்து வந்த வாழப்பாடி கே.ராமமூர்த்தி, அப்போதைய நாமகிரிபேட்டை ஒன்றியக்குழு தலைவர் புள்ளியப்பன் தலைமையில் 6 அடி உயரம் உள்ள முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் சிலையை திறந்து வைத்தார். இந்த சிலை கடந்த சில ஆண்டுகளாக வலது கை தோள்பட்டை வரை முறிந்த நிலையில் இருந்து வருகிறது. மேலும் சிலையின் வர்ணம் காய்ந்து பெயர்ந்த நிலையில் காணப்படுகிறது.

கட்சியில் வசதி படைத்தவர்கள் பலர் உள்ளனர். ஆனால் சிலையை புதுப்பித்து வர்ணம் பூசி முக்கிய நாட்களில் இந்திரா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த கட்சி நிர்வாகிகள் முன் வராதது ஏன்? என்று தெரியவில்லை. குழு ஒன்று அமைத்து உடனடியாக இந்திராகாந்தியின் சிலையை புதுப்பிக்க வேண்டும். சிலையை சுற்றி கம்பி வேலி அமைத்து சிலையை பாதுகாக்க வேண்டும். தலைவர்களின் சிலையை பாதுகாத்து பராமரிக்க வேண்டும் என்ற கோர்ட்டு உத்தரவு மிகவும் வரவேற்கத்தக்கது.

எழுதி வாங்க வேண்டும்

பெரியமணலி சமூக ஆர்வலர் தேவராஜ் :-

மறைந்த தலைவர்களின் சிலைகளை நிறுவுவது அவர்களது வரலாற்றை இளைய தலைமுறையினர், எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்வதற்கு மட்டும் அல்ல. அவர்களது வழியில் வாழ்ந்து பெயரும், புகழும் பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கமும் அதில் அடங்கி இருக்கிறது. எனவே பராமரிப்பு இன்றி இருக்கும் சிலைகளை கண்டறிந்து அதனை தொடர்ந்து நல்ல முறையில் பராமரிக்க வேண்டும்.

சிலைகளை வைத்துவிட்டு அதன் பிறகு அது பராமரிப்பு இல்லாமல் இருந்தால், அந்த தலைவர்களுக்கு நாம் உரிய கவுரவம் கொடுக்காமல் அவமரியாதை செய்கிறோம் என்றுதான் பொருள். எனவே சிலை வைப்பவர்களிடமும், சிலை வைக்கச்சொல்லி கோரிக்கை விடுப்பவர்களிடமும் நாங்கள் உரிய முறையில் சிலைகளை பராமரிப்போம் என்று எழுதி வாங்கிவிட்டு அனுமதி கொடுத்தால் நல்லது.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

அனுமதியின்றி வைக்கப்பட்ட சிலைகளை அகற்ற உத்தரவிட்டது போன்று அனுமதியோடு வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் சிலைகளை தொடர்ந்து நல்ல முறையில் பராமரிக்க வேண்டும் என்ற உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சமூக ஆர்வலர்கள் மத்தியில் இருக்கிறது.


Next Story