மாநில அளவிலான மல்லர்கம்ப போட்டி


மாநில அளவிலான மல்லர்கம்ப போட்டி
x
தினத்தந்தி 10 Sept 2023 12:15 AM IST (Updated: 10 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் மாநில அளவிலான மல்லர்கம்ப போட்டி நடைபெற்றது.

விழுப்புரம்

மல்லர்கம்ப போட்டி

விழுப்புரம் மாவட்ட மல்லர்கம்ப கழகம், நேரு யுவகேந்திரா, தமிழ்நாடு மல்லர்கம்ப கழகம் ஆகியவை இணைந்து 11-வது மாநில அளவிலான மல்லர்கம்பம் சாம்பியன்ஷிப் போட்டியை நேற்று விழுப்புரத்தில் நடத்தியது.

விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த இப்போட்டியின் தொடக்க விழாவிற்கு முன்னாள் நகரமன்ற தலைவர் ஜனகராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு மல்லர்கம்ப கழக தொழில்நுட்ப இயக்குனர் ராமச்சந்திரன், விழுப்புரம் பொதுச்செயலாளர் துரை.செந்தில்குமார், தலைவர் ஜனார்த்தனன் ஆகியோர் வரவேற்றனர். விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் கலந்துகொண்டு தேசிய கொடி ஏற்றி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ. கு.பா.பழனியப்பன், சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கினார். மாநில மல்லர்கம்ப கொடியை வடிவேல் பெருமாளும், மாவட்ட மல்லர்கம்ப கொடியை தமிழ்நாடு மல்லர்கம்ப கழக துணைத்தலைவர் ராமச்சந்திரனும் ஏற்றி வைத்தனர். தமிழ்நாடு மல்லர்கம்ப கழக நிறுவன தலைவர் உலகதுரை விளக்கவுரையாற்றினார். மாவட்ட அரிமா சங்க முன்னாள் தலைவர் வெங்கடேசன், ஊர்காவல் படை மண்டல தளபதி நத்தர்ஷா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இப்போட்டி நிகழ்வுகளை மாவட்ட மல்லர்கம்ப பொருளாளர் செந்தமிழ்அன்பு தொகுத்து வழங்கினார்.

550-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

இப்போட்டியில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி, திண்டுக்கல் உள்பட 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களை சேர்ந்த 550-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இதில் மல்லர்கம்பம், கயிறு மல்லர் கம்பம், தொங்கும் மல்லர் கம்பம் ஆகிய 3 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகள் 10, 12, 14, 18 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்டோர் என 5 பிரிவுகளாக நடந்தது. இதில் வீரர்கள், வீராங்கனைகள் ஆர்வமுடனும், உத்வேகத்துடனும் மல்லர் கம்பத்தில் ஏறி தங்கள் உடலை வில்லாக வளைத்து திறமையை நிரூபித்து அசத்தினர். இவர்களை தமிழ்நாடு மல்லர்கம்ப கழகத்தின் மூலம் நியமிக்கப்பட்ட 30 நடுவர்கள் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, இப்போட்டி இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. மாலையில் நடைபெறும் இதன் நிறைவு விழாவில் சிறந்த வீரர்கள், வீராங்கனைகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். அதேபோல் அவர்கள், தேசிய அளவிலான மல்லர் கம்ப போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.


Next Story