அலங்காநல்லூரில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி - வெற்றி பெற்ற அணிக்கு அமைச்சர் மூர்த்தி பரிசு வழங்கினார்
அலங்காநல்லூரில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு அமைச்சர் மூர்த்தி பரிசு வழங்கினார்
அலங்காநல்லூர்
தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு முதலாவது மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான கூடைப்பந்து விளையாட்டு போட்டிகள் 3 நாட்கள் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 14 கல்லூரி அணிகள் பங்கேற்றன. இதில் வெற்றி பெற்ற சென்னை எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவர்கள் முதல் பரிசும் மற்றும் கோப்பையை பெற்றனர். மேலும் 2, 3, 4-வது பரிசுகளும் வழங்கப்பட்டது.
பரிசளிப்பு விழாவிற்கு அலங்காநல்லூர் கூடைப்பந்து கிளப் தலைவர் ரகுபதி தலைமை தாங்கினார். கிளப் செயலாளர் காட்வின் வரவேற்றார். வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி முன்னிலை வகித்து வெற்றி பெற்ற அணிக்கு பரிசுகள் வழங்கினார். இதில், சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன், மாநில இளைஞரணி துணை செயலாளர் ராஜா, பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் தன்ராஜ், நகர் செயலாளர் மனோகரவேல் பாண்டியன், கூட்டுறவு வங்கி தலைவர் முத்தையன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வினோத் மற்றும் கட்சி நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், முன்னாள் மாணவர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கூடைப்பந்து கிளப் உறுப்பினர் ஹரிகாமு நன்றி கூறினார்.