எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது


எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது
x

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாக உள்ளது. மாணவர்கள் சமர்ப்பித்த செல்போன் எண்ணுக்கு மதிப்பெண்கள் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட உள்ளன.

சென்னை,

பிளஸ்-2, பிளஸ்-1, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடந்து முடிந்தது. இதில் பிளஸ்-2 பொதுத் தேர்வை எழுதிய மாணவ-மாணவிகளுக்கான தேர்வு முடிவு கடந்த 8-ந்தேதி வெளியானது.அதனைத் தொடர்ந்து பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கான தேர்வு முடிவு தனித்தனியாக வேறொரு நாட்களில் வெளியிட அரசு தேர்வுத் துறை திட்டமிட்டு இருந்தது.

இந்தநிலையில் 2 தேர்வு முடிவுகளையும் ஒரே நாளில் வெளியிட ஆலோசித்து வருவதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். அதன்படி, தேர்வுத் துறை எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவை இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட இருக்கிறது.

16 லட்சம் மாணவர்கள்...

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து பிளஸ்-1 பொதுத் தேர்வை பொறுத்தவரையில் 7 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வை சுமார் 8 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் எழுதியதாக சொல்லப்படுகிறது. அந்தவகையில் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளின் தேர்வு முடிவை இன்று அரசுத் தேர்வுத்துறை வெளியிடுகிறது.

இதில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவு இன்று காலை 10 மணிக்கும், பிளஸ்-1 பொதுத் தேர்வு முடிவு பிற்பகல் 2 மணிக்கும் மாணவ-மாணவிகள் தெரிந்து கொள்ள முடியும். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் சென்று தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். மேலும் மாணவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது சமர்ப்பித்த செல்போன் எண்ணுக்கும் மதிப்பெண்கள் குறுஞ்செய்தி வழியாக அனுப்பப்பட உள்ளன.


Next Story