'விளையாட்டு என்பது சமூகத்தின் கூட்டு பலத்தை பயன்படுத்தும் சிறந்த களம்' முதல்-அமைச்சர் பேச்சு
சென்னையில் நடந்த ‘தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை' தொடக்க விழாவில், “விளையாட்டு என்பது சமூகத்தின் கூட்டு பலத்தை பயன்படுத்தும் சிறந்த களம்'', என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை,
தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் 'தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை' தொடக்க விழா, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நேற்று மாலை நடந்தது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று புதிதாக அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை தொடங்கி வைத்து, முதல்-அமைச்சர் கோப்பைப் போட்டிகள் 2023-க்கான 'வீரன்' சின்னம், கருப்பொருள் பாடல் மற்றும் டி-ஷர்ட் ஆகியவற்றை வெளியிட்டார். மேலும், முதல்-அமைச்சர் கோப்பைப் போட்டிக்கான இலச்சினையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் இலச்சினை மற்றும் வலைதளத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் டோனியும் வெளியிட்டனர்.
விளையாட்டு துறையில் மறுமலர்ச்சி
அதனைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
விளையாட்டுத் துறையின் வளர்ச்சியானது மிகப்பெரிய பிரமாண்டத்தை 2 ஆண்டுகளில் அடைந்திருக்கிறது. அமைச்சர் உதயநிதி பொறுப்பில் விளையாட்டுத் துறையானது மேலும் மாபெரும் எழுச்சியைப் பெற்றுள்ளது. விளையாட்டுத் துறையில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை அவர் ஏற்படுத்துவார் என்று நம்புகிறேன்.
விளையாட்டு என்பது தனிமனிதனின் திறமையாக மட்டும் இருப்பது இல்லை, சமூகத்தின் கூட்டு பலத்தைப் பயன்படுத்துவதற்கும், தனிமனித சிறப்பை வளர்த்தெடுப்பதற்கும் ஓர் சிறந்த களம். அதனால்தான் அரசு அதற்கு அதிகப்படியான முக்கியத்துவம் தந்து கொண்டிருக்கிறது. எனவேதான் விளையாட்டு வீரர்களுக்கு திறன் மேம்பாடு, கல்வி, சுகாதாரம், உடல்தகுதி, தலைமைத் தகுதி, பொருளாதார மேம்பாடு ஆகியவற்றை உருவாக்கித் தருவதைக் கடமையாகக் கருதுகிறோம்.
'முதல்-அமைச்சர் கோப்பை'
'முதல்-அமைச்சர் கோப்பை' என்ற பெயரில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுப் பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மாவட்டம் மற்றும் மாநில அளவில் சிலம்பம், கபடி, கால்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட 15 வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன. தமிழ்நாட்டை விளையாட்டுப் போட்டிகளில் உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்கச் செய்யும் நோக்கத்தோடு இந்த ஆண்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மானியக் கோரிக்கையில் பல மகத்தான அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் ஸ்குவாஷ் விளையாட்டுக்கான உலகக்கோப்பைப் போட்டிகள், ஆசிய ஆக்கி ஆடவர் சாம்பியன்ஷிப், ஏ.டி.பி. சென்னை ஓபன் டூர் போன்ற உலகப் போட்டிகளை நடத்துதல் ஆகிய இலக்குகளை உருவாக்கிக் கொண்டு செயல்பட்டு வருகிறார் அமைச்சர் உதயநிதி. இந்த வரிசையில் மாநிலத்தில் விளையாட்டு மேம்பாட்டிற்காகப் பொதுமக்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் இணைந்து இந்த அறக்கட்டளையை உருவாக்குவதும் ஒரு முக்கிய அறிவிப்பு.
உலகளவில் பரிசுகளை குவிக்க வாழ்த்து
மிக நல்ல நோக்கத்துக்காக தொடங்கப்பட்டுள்ள இந்த அறக்கட்டளை, அந்த நோக்கத்தை மிகச் சரியாக நிறைவேற்றிக் காட்ட வேண்டும். இந்தத் துறை மேலும் சிறக்கவும், ஏராளமான விளையாட்டு வீரர்களை உருவாக்கவும், அகில இந்திய அளவில் மட்டுமல்லாமல், உலகளவில் நமது வீரர்கள் பரிசுகளை தொடர்ந்து குவிக்கவும் வாழ்த்தி விடைபெறுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் இறையன்பு, தயாநிதி மாறன் எம்.பி., இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாதரெட்டி உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
27 ஆயிரம் வீரர்கள் பங்கேற்பு
முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டிகள் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் நடத்தப்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் வெற்றி பெறும், தேர்வு செய்யப்படும் சிறந்த அணிகள், வீரர்கள் மாநில அளவிலான முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பார்கள்.
இந்த போட்டிகள் சென்னையில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சர்வதேச தரத்திலான விளையாட்டு அரங்கங்களின் வசதிகளை பயன்படுத்தி ஜூன் மாதம் நடைபெறவுள்ளன. இதில் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். மாநில அளவிலான போட்டியில், பதக்க நிலைக்கு ஏற்ப அதிக புள்ளிகள் பெறும் முதல் 3 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு முதல்-அமைச்சர் கோப்பை வழங்கப்படும். இதற்காக தமிழ்நாடு அரசு ரூ.50.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.