போலீசாருக்கான விளையாட்டு போட்டி


போலீசாருக்கான விளையாட்டு போட்டி
x

நாகர்கோவிலில் போலீசாருக்கான விளையாட்டு போட்டி நடந்தது. இந்த போட்டியை சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தொடங்கி வைத்தார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் போலீசாருக்கான விளையாட்டு போட்டி நடந்தது. இந்த போட்டியை சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தொடங்கி வைத்தார்.

மெகா மருத்துவ முகாம்

போலீஸ் துறையில் பணியாற்றும் போலீசார் தொடா்ந்து பணியில் ஈடுபடுவதால் உடல் நலம் மற்றும் மனதளவில் பாதிக்கப்படாமல் இருக்கவும், அவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையிலும் யோகா, விளையாட்டு போட்டிகள் மற்றும் மருத்துவ முகாம் போன்றவை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நடவடிக்கை மேற்கொண்டார்.

அதன்படி கடந்த 1 மற்றும் 2 -ந் தேதிகளில் நாகர்கோவில் ஆயுதப்படையில் மெகா மருத்துவ முகாம் நடந்தது. இதில் போலீசார், அமைச்சுப்பணியாளர்கள், ஊர்காவல் படையினர் மற்றும் போலீசாரின் குடும்பத்தினர் என மொத்தம் 2,500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

போலீசார் உற்சாகம்

தொடர்ந்து நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் நேற்று போலீசாருக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது. போட்டிகள் வருகிற 9-ந் தேதி வரை நடக்கிறது.

முதல் நாளாக நேற்று கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை மற்றும் குளச்சல் ஆகிய சப்-டிவிசனுக்கு உட்பட்ட 500 போலீசார் கலந்து கொண்டு விளையாடினர்.

போட்டியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் நவீன் குமார், ராஜா, கணேசன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அருண், திருமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம், வடம் இழுத்தல், பேட்மிண்டன், கிரிக்கெட், கைப்பந்து, வட்டு எறிதல், குண்டு எறிதல், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல் உள்பட பல்வேறு தடகள விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் போலீசார் உற்சாகமாக கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிபடுத்தினர். போட்டிகளில் பங்கேற்றவர்களை மற்ற போலீசார் கைகள் தட்டி ஆராவாரம் செய்து ஊக்குவித்தனர்.

போலீஸ் சூப்பிரண்டு பேட்டி

போட்டியை தொடங்கி வைத்த பிறகு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

போலீசாரின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு, 2 நாட்கள் மெகா மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பயன்பெற்றனர்.

தொடர்ந்து போலீசாருக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில், விளையாட்டு போட்டிகள் இன்று (அதாவது நேற்று) தொடங்கி, வருகிற 9-ந் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

9-ந் தேதி இறுதி போட்டிகள் நடத்தப்படும். இதில் வெற்றி பெறுகிறவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

போட்டிகளில் ஊர்க்காவல் படையினர், போலீசார் என 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

புதிதாக 800 கண்காணிப்பு கேமராக்கள்

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் திருட்டு சம்பவங்களை கண்டுபிடிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக சிறையில் இருந்து வெளியே வரும் குற்றவாளிகளின் விவரங்கள் சேகரிப்பட்டு அவர்களை கண்காணிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். ஜாமீனில் வெளியே வந்தவர்களின் விவரங்களும் சேகரிக்கப்படுகின்றன.

பொதுமக்கள் தங்களது வீடுகளில் கண்காணிப்பு கேமராவை கண்டிப்பாக பொருத்த வேண்டும். இதன் மூலம் குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு முக்கிய சந்திப்புகள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

அடுத்த 7 மாத காலத்திற்குள் நாகர்கோவில், தக்கலை, குளச்சல் மற்றும் கன்னியாகுமரி ஆகிய சப்-டிவிசன்களில் தலா 200 ேகமராக்கள் வீதம் 800 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு ஹரிகிரண் பிரசாத் கூறினார்.


Next Story