ஆன்மிகத்தையும், தமிழையும் பிரிக்க முடியாது


ஆன்மிகத்தையும், தமிழையும் பிரிக்க முடியாது
x
தினத்தந்தி 25 May 2023 12:15 AM IST (Updated: 25 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆன்மிகத்தையும், தமிழையும் பிரிக்க முடியாது என புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சொல்கிறார்

மயிலாடுதுறை

சீர்காழி:

ஆன்மிகத்தையும், தமிழையும் பிரிக்க முடியாது என்று புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

பேட்டி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாதர் கோவில் குடமுழுக்கு விழா நேற்று நடந்தது.

இந்த விழாவில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரிக்க முடியாது

ஆன்மிகத்தையும், தமிழையும் பிரிக்க முடியாது. ஆன்மிகத்தோடு கூடிய தமிழ் இன்னும் தமிழகத்தில் பரப்பப்பட வேண்டும். தமிழுக்கும், ஆன்மிகத்திற்கும் சம்பந்தம் இல்லை என சில பேர் கொள்கை ரீதியாக பேசி வருகிறார்கள். அது தவறு என மக்கள் தங்கள் நடவடிக்கையின் மூலம் நிரூபித்துக்கொண்டு வருகிறார்கள்.

தமிழோடு சேர்ந்து ஆன்மிகம் தழைக்கும். தமிழையும், ஆன்மிகத்தையும் பிரிக்க முடியாது என்ற எண்ணம் இன்னும் அதிகமாக விதைக்கப்பட வேண்டும்.

கருப்புக்கொடி காட்டுவது தவறு

தமிழக கவர்னர் அவரது கருத்தை சொல்கிறார். அதற்காக அவருக்கு கருப்புக்கொடி காட்டுவது தவறு. தமிழகத்தில் எல்லோருக்கும் எங்கும் சென்று வருவதற்கு உரிமை உள்ளது.

அதேபோல் அவரவர்களுக்கு கருத்து சொல்வதற்கும் உரிமை உள்ளது. ஆன்மிக நிகழ்ச்சிக்கு அழைப்பை ஏற்று வரும்போது இதுபோன்ற போராட்டங்களை தவிர்ப்பது நல்லது.

கவர்னருக்கு அதிகாரம்

புதுச்சேரி கவர்னர் வெளியேற வேண்டும் என்று சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை. கொரோனா நேரத்தில் புதுச்சேரி மக்களுக்காக அந்த அளவிற்கு நான் சேவையாற்றி உள்ளேன்.

புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, என்னை அதிகார வெறிபிடித்து அலைகிறேன் என்று கூறுகிறார். எனக்கு எங்கேயுமே வெறி பிடிக்கவில்லை. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். என்னை எதிர்த்து போராடுபவர்களுக்கெல்லாம் என்னிடம் சுமூகமான உறவு உள்ளது.

முற்றிலும் மறுக்கிறேன்

ஓராண்டில் 1500 கோப்புகளை சரி செய்துள்ளேன். 17 கோப்புகளுக்கு சந்தேகங்களை எழுப்பி உள்ளேன். குழந்தைகளுக்கு லேப்டாப், மருத்துவமனையை மேம்படுத்துவது மற்றும் ரூ.2 ஆயிரம் கொடுப்பது உள்ளிட்ட அனைத்திலும் முதல்-அமைச்சர் என்ன நினைக்கிறாரோ அதற்கு நான் ஒப்புதல் அளித்துள்ளேன்.

தான்தோன்றித்தனமாக முதல்-அமைச்சரையும், அமைச்சர்களையும் ஒதுக்கிவிட்டு கவர்னர் அதிகாரத்தை தனது கையில் எடுத்துள்ளார் என்பதை முற்றிலும் நான் மறுக்கிறேன்.

சுயநலம் இல்லை

எனவே என்னை எதிர்ப்பவர்களை பற்றி கொஞ்சம் கூட நான் கவலைப்படவில்லை. எனது பணியில் கொஞ்சம் கூட சுயநலம் இல்லை. கவர்னர் எப்போதும் புதுச்சேரியிலேயே உள்ளார் என்று நாராயணசாமி கூறுகிறார்.

நான் இங்கேயே இருப்பது குறித்து அவர்(நாராயணசாமி) சந்தோஷப்பட வேண்டும். எனவே என்னை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்பவர்களை மக்கள் புறந்தள்ளுவார்கள் என்பது என்னுடைய கருத்து.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது பா.ஜனதா மாவட்ட தலைவர் அகோரம், இந்து முன்னணி மாவட்ட தலைவர் சரண்ராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர்.ஆன்மிகத்தையும், தமிழையும் பிரிக்க முடியாது


Next Story