''ஆன்மிகத்தையும், திராவிடத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது''-அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
அண்ணாமலையார் கோவிலை தொல்பொருள் துறையிடமிருந்து மீட்டு தந்தவர் கருணாநிதி. எனவே ஆன்மிகத்தையும் திராவிடத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது என்று அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
ரூ.6.40 கோடியில் வணிக வளாகம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் முன்பு ரூ.6.40 மதிப்பில் 151 கடைகள் கொண்ட வணிக வளாகம் அரசு சார்பில் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு வணிக வளாகத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
1996-ம் ஆண்டு ஏற்பட்ட 16 கால் மண்டப தீ விபத்தின்போது கடை வைத்திருந்த வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். பல ஆண்டுகளுக்குப் பின்பு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் நாங்களும் பலமுறை ஆய்வு செய்து கடைகள் கட்ட நடவடிக்கை எடுத்த போது அதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்து அதற்கான நிதி ஒதுக்கி தந்துள்ளார். அதன் அடிப்படையில் 27 ஆண்டுகளுக்கு பிறகு 151 கடைகள் கொண்ட வணிக வளாகம் ரூ.6.40 கோடி மதிப்பில் இங்கே கட்டப்படுகிறது. இதில் ஏற்கனவே கடை வைத்திருந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பிரித்துப்பார்க்க முடியாது
ஆன்மிகத்தையும் திராவிடத்தையும் எப்போதுமே பிரித்துப் பார்க்க முடியாது. அதற்கு உதாரணமாக திருவண்ணாமலை விளங்கிக் கொண்டிருக்கிறது. மத்தியில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி செய்த போது அண்ணாமலையார் கோவிலை மத்திய தொல்பொருள் துறை கையகப்படுத்தி நடவடிக்கை எடுத்தது. அப்போது முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி அதனை தடுத்து நிறுத்தி அண்ணாமலையார் கோவிலை தொல்பொருள் துறையிடமிருந்து மீட்டுத் தந்தார்.
அதன் விளைவாக இன்றைக்கு திருவண்ணாமலைக்கு பவுர்ணமி நாட்களில் 4 லட்சம் முதல் 10 லட்சம் வரை பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இதனால் பல்வேறு வியாபாரம் நடைபெற்று பொருளாதார ரீதியாகவும் மக்கள் பயன் அடைந்து வருகிறார்கள்.
அன்றைக்கு அண்ணாமலையார் கோவிலை கருணாநிதி மீட்டு தந்ததால் தான் இன்றைக்கு ஆன்மிக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மக்கள் பயனடைகிறார்கள். எனவே ஆன்மிகத்தையும் திராவிடத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது.
ஆன்மிகப் பணியாற்றும் முதல்-அமைச்சர்
தமிழகம் முழுவதும் திருக்கோவில்களுக்கு கும்பாபி ஷேகம் நடத்தி ஆன்மிக பணி செய்யும் பெருமை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினையும் இந்த துறை அமைச்சர் சேகர்பாபுவை சேரும்.
மேற்கண்டவாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் முருகேஷ் சி.என்.அண்ணாதுரை எம்.பி. மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இரா ஸ்ரீதரன், பொன்முத்து எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, சரவணன் மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம் அண்ணாமலையார் கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா. ஜீவானந்தம், ப்ரியா விஜய ரங்கன், அறங்காவலர்கள் மீனாட்சி சுந்தரம், கோமதி குணசேகரன், டி.வி.எஸ். ராஜாராம், பெருமாள், வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த எம்.மண்ணுலிங்கம், தனகோட்டி ரவிச்சந்திரன், ராஜசேகர், பாஸ்கரன், சண்முகம் மற்றும் துரை வெங்கட் உள்பட பல கலந்து கொண்டனர்.