ஆ.ராசா எம்.பி.யை மிரட்டும் வகையில் பேச்சு: கோவை மாவட்ட பா.ஜ.க. தலைவர் கைது
தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவை மிரட்டும் வகையில் பேசியதாக கோவை மாவட்ட பா.ஜ.க தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து அக்கட்சியினர் சாலைமறியல் செய்தனர்.
கோவை,
தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ஆ.ராசா, இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக அவரை கண்டித்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவை பீளமேடுபுதூர் பகுதியில் இந்து முன்னணி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கோவை மாவட்ட பா.ஜ.க தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் ஆ.ராசா மற்றும் தி.மு.க.வினர் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலும், மிரட்டும் தொனியிலும் பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலானது.
மாவட்ட தலைவர் கைது
இதையடுத்து பீளமேடு போலீசார் தாமாக முன்வந்து பா.ஜ.க மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி மீது கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசுதல், இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக நேற்று அதிகாலை பீளமேடு போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் அவரை கைது செய்தனர்.
தள்ளுமுள்ளு
இதையறிந்த பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கான பா.ஜ.கவினர் திண்டு பீளமேடு போலீஸ் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். ஆனால் அவர்களை உள்ளே நுழைய விடாமல் போலீசார் தடுப்புகளை வைத்து அடைத்து தடுத்து நிறுத்தினர்.
இதனால் போலீசாருக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்தநிலையில், போலீசார் பாலாஜி உத்தம ராமசாமியை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக காரில் ஏற்றி அழைத்து செல்ல முயன்றனர்.
இதை பார்த்த பா.ஜ.க.வினர் அந்த காரை அங்கிருந்து செல்ல விடாமல் தடுத்ததுடன், காரின் மீதும் ஏறி அமர்ந்து கொண்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை காரில் இருந்து குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர்.
400 பேர் கைது
இதையடுத்து போலீஸ் நிலையத்தின் எதிரே உள்ள அவினாசி சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஆ.ராசாவின் உருவ பொம்மையையும் தீ வைத்து கொளுத்தினர். அத்துடன் மேம்பால சுவர்களில் ஒட்டப்பட்டு இருந்த கட்சிகளின் சுவரொட்டிகளை மொத்தமாக தீவைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சாலைமறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 400 பேர் கைது செய்யப்பட்டு அங்குள்ள மண்டபங்களில் அடைக்கப்பட்டனர்.