பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி
பெரியார், அண்ணா பிறந்த நாளையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடக்கிறது.
நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாவட்ட கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டி வருகிற 15-ந்தேதி அண்ணா பிறந்த நாளையொட்டி நெல்லை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. இதேபோன்று 17-ந்தேதி பெரியார் பிறந்த நாளையொட்டியும் பேச்சு போட்டி நடக்கிறது. இந்த போட்டி காலை 10 மணிக்கு தொடங்குகிறது.
அண்ணா பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கு இடையே நடைபெறுகின்ற பேச்சு போட்டிக்கு தாய் மண்ணிற்கு பெயர் சூட்டிய தனயன், மாணவருக்கு அண்ணா, அண்ணாவின் மேடைத்தமிழ், அண்ணா வழியில் அயராது உழைப்போம் என்ற தலைப்புகளும், கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிக்கு பேரறிஞர் அண்ணாவும், தமிழ் மறுமலர்ச்சியும், பேரறிஞர் அண்ணாவின் சமுதாய சிந்தனைகள், அண்ணாவின் தமிழ் வளம், அண்ணாவின் அடிச்சுவட்டில் தம்பி, மக்களிடம் செல் ஆகிய தலைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
17-ந்தேதி பெரியார் பிறந்த நாளையொட்டி நடக்கும் பேச்சு போட்டிகளுக்கு பள்ளி மாணவர்களுக்கு, தொண்டு செய்து பழுத்த பழம், தந்தை பெரியாரும் தமிழ் சமுதாயமும், தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகள், தந்தை பெரியார் காண விரும்பிய உலக சமுதாயம், தந்தை பெரியாரும் பெண் விடுதலையும் என்ற தலைப்புகளும், கல்லூரி மாணவர்களுக்கு தந்தை பெரியாரும் பெண் விடுதலையும், தந்தை பெரியாரும் மூடநம்பிக்கை ஒழிப்பும், பெண் ஏன் அடிமையானாள்? சமூக விஞ்ஞானி பெரியார், உலக சிந்தனையாளர்களும் பெரியாரும் என்ற தலைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அளவில் நடைபெறும் கல்லூரி பேச்சு போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்கள் அந்தந்த கல்லூரி முதல்வரிடம் பரிந்துரை கடிதம் பெற்று போட்டி நாளன்று நேரில் வர வேண்டும்.
மாவட்ட அளவில் நடைபெறும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சு போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். போட்டியில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பரிசு ரூ.2 ஆயிரம் வீதம் 2 மாணவர்களுக்கு வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் பரிந்துரை கடிதம் பெற்று போட்டி நாளன்று நேரில் வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.