கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு


கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 7 Sept 2023 1:45 AM IST (Updated: 7 Sept 2023 1:45 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல்

சிறப்பு வழிபாடு

பகவான் கிருஷ்ணர் அவதரித்த நாள் கோகுலாஷ்டமியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கிருஷ்ணர் கோவில்கள் மற்றும் அவரவர் இல்லங்களிலும் குழந்தைகளின் பாதங்களை வரைந்து சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவிலில் உள்ள சந்தான கிருஷ்ணன், திண்டுக்கல் நாகல்நகர் சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் உள்ள கிருஷ்ணர் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து கிருஷ்ணர் கோவில்களிலும் கோகுலாஷ்டமியையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

செம்பட்டி அருகே உள்ள எஸ்.புதுக்கோட்டை பெருமாள் கோவிலில், கோகுலாஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து எஸ்.புதுக்கோட்டை பொதுமக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

பள்ளிக்கொண்டான் அலங்காரம்

நத்தம் அருகே மதுக்காரம்பட்டி கிராமத்தில் உள்ள கோகுலகிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. இதையொட்டி முதல் நாள் திருவிளக்கு பூஜை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. நேற்று காலையில் பால்குடம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

பின்னர் மாலையில் சுவாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து மாலையில் பள்ளிக்கொண்டான் அலங்காரத்தில் சுவாமி தேவியருடன் எழுந்தருளி வீதி உலா வந்தது.

முன்னதாக பெண்கள் பாரம்பரியமான கோலாட்டத்துடன் கும்மியடித்தனர். இளைஞர்கள் உறியடித்து அசத்தினர். மேலும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. மேலும் அன்னதானம் வழங்கப்பட்டது.

குழந்தைகளின் பாதம் வரைந்து...

இதேபோல் குழந்தைகளின் பாதங்களை வரைந்து, பல்வேறு பதார்த்தங்கள் செய்து அதை கிருஷ்ணருக்கு படைத்து சிறப்பு வழிபாடுகள் செய்தனர். குழந்தைகளுக்கு ராதை-கிருஷ்ணர் வேடமிட்டு அழகு பார்த்தனர். மாவட்டம் முழுவதும் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story