கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆங்கிலப்புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திட்டச்சேரி:
ஆங்கிலப்புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு வழிபாடு
நாகை மாவட்டம் திருமருகல் அருகே கோதண்டராஜபுரத்தில் பெரியநாயகி கோவில் உள்ளது. இந்த கோவிலில் அய்யப்பன் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஆங்கிலப்புத்தாண்டையொட்டி உலக நன்மை வேண்டியும், மக்கள் வறுமை நீங்கி செல்வச் செழிப்புடன் வாழவும் அய்யப்பனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக அய்யப்பனுக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் பெரியநாயகி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
ரத்தினகிரீஸ்வரர் கோவில்
திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோவில், சுப்பிரமணியர் கோவில், தர்மர் கோவில், செல்லியம்மன் கோவில், மகா மாரியம்மன் கோவில், வரதராஜ பெருமாள்கோவில், திருச்செங்காட்டங்குடி உத்திராபதீஸ்வரர் கோவில், திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
கீழத்தஞ்சாவூர் பஞ்சலிங்கேஸ்வரர் கோவில், திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவில், ஆதினக்குடி மாரியம்மன் கோவில், சீயாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோவில், காலபைரவர் கோவில், மருங்கூர் பெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்
நாகை வெளிப்பாளையத்தில் உள்ள சத்ரு சம்கார மூர்த்தி கோவிலில், ஆண்டுதோறும் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி நேற்று ஆங்கில புத்தாண்டையொட்டி சத்ரு சம்கார மூர்த்திக்கு 5.50 லட்சம் ரூபாய் நோட்டுக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
இதில் 5, 10. 20, 50, 100, 200, 500, 2 ஆயிரம் மற்றும் சிங்கப்பூர் வெள்ளி ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டது.அதைத்தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப் பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சந்தனக்காப்பு அலங்காரம்
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ள துர்க்கை அம்மனுக்கு ஆங்கில புத்தாண்டைெயாட்டி சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.