சித்ரா பவுர்ணமியையொட்டிகோவில்களில் சிறப்பு வழிபாடு


நாமக்கல் மாவட்டத்தில் சித்ரா பவுர்ணமியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல்

கோவில்களில் சிறப்பு வழிபாடு

சித்திரை மாத பவுர்ணமியையொட்டி நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. அதன் ஒரு பகுதியாக நாமக்கல்லில் மோகனூர் சாலையில் உள்ள பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில், முருகனுக்கு பால், சந்தனம், மஞ்சள் உள்பட 16 பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் நாமக்கல் தட்டாரத் தெருவில் உள்ள ஏகாம்பர ஈஸ்வரர் கோவில் ,பல பட்டறை மாரியம்மன் கோவில் மற்றும் மூனுசாவடி ஆவுடையார் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மாரியம்மன்

பரமத்திவேலூர் வட்டாரத்தில் உள்ள அம்மன் மற்றும் முருகன் கோவில்களில் சித்ரா பவுர்ணமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பாண்டமங்கலம் அருகே கோப்பணம்பாளையத்தில் உள்ள அரசாயியம்மன், பரமத்தியில் உள்ள அங்காளம்மன், பரமத்திவேலூரில் உள்ள மாரியம்மன், பழைய பைபாஸ் ரோட்டில் உள்ள செல்லாண்டியம்மன், பேட்டையில் உள்ள புதுமாரியம்மன், நன்செய்இடையாற்றில் உள்ள மாரியம்மன் மற்றும் ராஜா சாமி கோவில், பிலிக்கல்பாளையம் அருகே உள்ள கரட்டூர் விஜயகிரி வடபழனியாண்டவர் கோவில், கபிலர்மலை பாலசுப்பிரமணிய சாமி உள்ளிட்ட கோவில்களில் சித்ரா பவுர்ணமியையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

செல்லாண்டியம்மன்

மோகனூர் பகுதிகளில் சித்ரா பவுர்ணமியொட்டி கோவில்களில் பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவில், காந்தமலை முருகன் கோவில், வெங்கட்ரமண பெருமாள் கோவில், நாவலடியான் கோவில், வள்ளியம்மன்கோவில், சுண்டக்கா செல்லாண்டியம்மன் கோவில் ஒருவந்தூர் பிடாரி செல்லாண்டியம்மன் கோவில், ஆரியூர் முத்துசாமி கோவில், எஸ்.வாழவந்தி மாரியம்மன் கோவில், செல்லாண்டியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் காலை முதல் பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

வீரமாத்தி அம்மன்

பள்ளிபாளையம் காவிரி கரையில் உள்ள வீரமாத்தி கோவிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி அம்மனுக்கு விசேஷ பூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து காலையில் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம், வேல் எடுத்து ஊர்வலம் நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் நாமகிரிப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில்லில் சித்ரா பவுர்ணமியையொட்டி சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் சாமிக்கு வடமாலை, துளசி மாலை அணிவித்து தரிசனம் செய்தனர். இதேபோல் ஆர்.புதுப்பட்டியில் உள்ள அம்மன் கோவில், நாமகிரிப்பேட்டை பெருமாள் கோவில், சீராப்பள்ளி ஈஸ்வரன் கோவில், ஒடுவன் குறிச்சி மாரியம்மன் கோவில், முள்ளுக்குறிச்சி, மங்களபுரம், தொப்பம்பட்டி, ஜேடர்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள கோவில்களில் சித்ரா பவுர்்ணமியையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், விசேஷ பூஜை ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவிளக்கு பூஜை

ராசிபுரம் அருகே உள்ள கொழிஞ்சிப்பட்டி பண்ணை அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி லட்சார்ச்சனை, 108 வலம்புரி சங்காபிஷேகம், திருவிளக்கு பூஜை நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலையில் மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், குபேர மகாலட்சுமி ஹோமம் நடந்தது. சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. காலையில் லட்சார்ச்சனை தொடங்கி மதியம் நிறைவடைந்தது. 108 வலம்புரி சங்காபிஷேகம், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மாலையில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு விளக்கு வைத்து அம்மனை வழிபட்டனர்.

இரவு மகா தீபாராதனையும், அம்மன் திருவீதி உலா மற்றும் வாண வேடிக்கையும் நடந்தது. இரவில் கொங்கு ஒயிலாட்டம் மற்றும் ஈசன் வள்ளி கும்மி நிகழ்ச்சி நடந்தது. இதேபோல் சித்ரா பவுர்ணமியையொட்டி ராசிபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. ராசிபுரம் கைலாசநாதர் கோவில் சித்திரை தேரோட்டம் நேற்று 2-வது நாளாக நடந்தது. கடைவீதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து வந்தனர்.

பக்தர்கள் கிரிவலம்

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் சித்ரா பவுர்ணமியையொட்டி சிறப்பு அபிஷேகங்கள், விசேஷ பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து அர்த்தநாரீஸ்வரர் மலையை சுற்றி திரளான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இதனால் நகரம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக குழுமியிருந்தனர். மேலும் கிரிவல பாதையில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story