முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
வைகாசி விசாகத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஊட்டி
வைகாசி விசாகத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வைகாசி விசாகம்
வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் முருகப்பெருமான் அவதரித்ததாக புராண வரலாறுகள் கூறுகிறது. இந்தநிலையில் நேற்று வைகாசி விசாகத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. ஊட்டி எல்க்ஹில் பகுதியில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 24-ந் தேதி வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று, கொடிமரத்தில் காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து வைகாசி விசாக நாளான நேற்று காலை முதல் கோவிலுக்கு பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். சீசன் என்பதால் சுற்றுலா பயணிகளும் பக்தர்களுடன் கோவிலுக்கு வந்ததை காண முடிந்தது. பின்னர் சிறப்பு பூஜை, யாகம் நடந்தது. தொடர்ந்து ராஜ அலங்காரத்தில் இருந்த மூலவருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
சுவாமி வீதி உலா
இதையடுத்து மதியம் 12 மணியளவில் மயில் வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளினார். பின்னர் கோவிலில் இருந்து சுவாமி வீதி உலா நடைபெற்றது. பாம்பே கேசில், ஏ.டி.சி., மாரியம்மன் கோவில், பஸ் நிலையம் வழியாக தேரோட்டம் கோவிலை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா கோஷம் எழுப்பிய படி சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
கூடலூர் குசுமகிரி முருகன் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜை நடைபெற்றது. காலை 11 மணிக்கு சுவாமிக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் கூடலூர் 1-ம் மைல், நந்தட்டி, ஓவேலி சந்தன மலை, சூண்டி கல்யாண மலை உள்ளிட்ட முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதேபோல் பந்தலூர் முருகன் கோவிலிலும் வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.