பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை


பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
x

வேலூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை, அபிஷேகம் நடைபெற்றது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் படையலிட்டு வழிபாடு செய்தனர்.

வேலூர்

புரட்டாசி சனிக்கிழமை

தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் வரும் ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை, அலங்காரம், அபிஷேகம் செய்யப்படும். மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பெருமாளுக்கு படையலிட்டு வழிபாடு செய்வார்கள். புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி வேலூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் அதிகாலை சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பூஜைகள் நடந்தன.

வேலூர் அண்ணாசாலையில் உள்ள திருமலை-திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் காலையில் சிறப்பு பூஜை, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதையொட்டி அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வரிசையை ஒழுங்குப்படுத்தும் மற்றும் கண்காணிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். பக்தர்களுக்கு பல்வேறு தன்னார்வ அமைப்புகள் சார்பில் இனிப்பு, பொங்கல் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

சிறப்பு பூஜை

இதேபோன்று வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் உள்ள வெங்கடேச பெருமாளுக்கு காலை 7.30 மணிக்கு அபிஷேகமும், அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. வேலூர் சத்துவாச்சாரி செல்வகணபதி கோவிலில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.

வேலூர்-காட்பாடி சாலையில் உள்ள சீனிவாச கல்யாண வெங்கடேச பெருமாள் கோவில், காட்பாடியில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், வேலப்பாடியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில், காங்கேயநல்லூர், ரங்காபுரம், பிரம்மபுரம் வரதராஜபெருமாள் கோவில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும், மற்ற கோவில்களில் உள்ள பெருமாள் சன்னதிகளிலும் சிறப்பு பூஜை, அபிஷேகம் மற்றும் வழிபாடு நடந்தது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், பூஜை செய்து படையலிட்டு வழிபாடு செய்தனர்.

வள்ளிமலை

வள்ளிமலை கிரிவலப் பாதையில் சுயம்பாக எழுந்தருளி இருக்கும் சுயம்பு தென் வெங்கடாசலபதி கோவிலில் காலையில் கோ பூஜை நடந்தது. தொடர்ந்து மகாசுதர்ஷன ஹோமம், சுவாமிக்கு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் சுவாமி சர்வ அலங்கார ரூபத்தி காட்சியளித்தார்.

உற்சவமூர்த்திகள் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் பரமபத நாதனாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் எம்பெருமான் மாடவீதிகளில் வலம் வந்தார். இரவில் ஊஞ்சல் சேவை நடந்தது. அப்போது பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.


Next Story